கீழப்பழுவூர், தொட்டிக்குளத்தில் அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்


கீழப்பழுவூர், தொட்டிக்குளத்தில் அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 21 Aug 2019 4:00 AM IST (Updated: 21 Aug 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

கீழப்பழுவூர், தொட்டிக்குளத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நடந்த தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர் கிராமத்திலுள்ள திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து திரவுபதியம்மன், பஞ்சபாண்டவர்களின் சிலைகளை பக்தர்கள் தோளில் சுமந்து கொண்டு ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக கொண்டு சென்று கோவில் முன்புள்ள தீமிதி திடலை சென்றடைந்தனர்.

நேர்த்திக்கடன்

மேலும் அம்மனுக்கு வேண்டியிருந்த 150-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி சுமந்து கொண்டும், அலகு குத்திக்கொண்டும், கரகம் ஏந்தியும், அவர்களது குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டும் ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக வந்து தீக்குண்டத்தில் இறங்கி சென்று தங்களதுநேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் அரியலூர், பெரம்பலூர், மேலப்பழுவூர், வாரணவாசி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

வீதியுலா

இதேபோல் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தொட்டிக்குளம் கிராமத்தில் வீரணார், பாப்பாத்தியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா கடந்த 11-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி கழுகுமரம், கரகம், பால்குடம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் வீரணார், பாப்பாத்தியம்மனுக்கு தினமும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சாமி வீதியுலா நடைபெற்றது.

பக்தர்கள் தரிசனம்

இதையடுத்து நேற்று முன்தினம் மாலை கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் தீ மூட்டபட்டது. பின்னர் அக்னி குண்டத்தில் தீ மிதித்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பக்தர்கள் அனைவரும் தங்களது நேர்த்திக்கடனை பக்தி பரவசத்துடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கங்கைகொண்டசோழபுரம், உட்கோட்டை, இடைக்கட்டு, காட்டாத்தூர் மற்றும் அருகில் உள்ள பல்வேறு கிராமத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு பாப்பாத்தியம்மன் சாமி வீதியுலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் வீடுகள் தோறும் மாவிளக்கு போட்டு, தேங்காய் உடைத்து தீபாராதனை காண்பித்து பாப்பாத்தியம்மனை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் நாட்டாண்மைகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story