பால் விலை அதிகரிப்பு எதிரொலி கீரமங்கலம் பகுதியில் டீ, காபி விலை உயர்ந்தது


பால் விலை அதிகரிப்பு எதிரொலி கீரமங்கலம் பகுதியில் டீ, காபி விலை உயர்ந்தது
x
தினத்தந்தி 21 Aug 2019 4:30 AM IST (Updated: 21 Aug 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் பால் விலை அதிகரிப்பால் கீரமங்கலம் பகுதிகளில் உள்ள கடைகளில் டீ, காபி ஆகியவை விலை உயர்ந்தது.

கீரமங்கலம்,

விவசாயிகள் தங்கள் வீடுகளில் பால் மாடுகளை வளர்த்து வருகின்றனர். கடந்த பல வருடங்களாக வறட்சி அதிகமாக உள்ளதால் அதற்கான வைக்கோல், தீவனங்கள் போன்றவை கடுமையாக விலை உயர்ந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 ஆயிரத்திற்கு வாங்கிய ஒரு டிராக்டர் வைக்கோல் தற்போது ரூ.8 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பால் மாடு வளர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கால்நடைகளுக்கான தீவனம் விலை ஏற்றத்தால் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கொள்முதல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.4 விலை உயர்த்தப்படுவதுடன் விற்பனை விலை ரூ.6 உயர்த்தப்படுகிறது என்று அறிவித்தார். இந்த விலை ஏற்றம் கடந்த 19-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

டீ விலை உயர்வு

பால் விற்பனை விலை ரூ.6 வரை உயர்த்தப்பட்டு கூட்டுறவு சங்கங்களில் ஒரு லிட்டர் பால் விலை ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல தனியார் பால் நிறுவனங்களும் விலை ஏற்றியுள்ளனர். இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் உள்ளிட்ட பல ஊர்களில் டீ க்கு ரூ. ஒன்று விலை ஏற்றப்பட்டுள்ளது. அதே போல பார்சல் டீ க்கு ரூ. 2 வரை விலை உயர்த்தியுள்ளனர். இந்த விலை உயர்வு இன்று (புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வருவதாக ஒவ்வொரு டீக் கடையிலும் துண்டறிக்கையாக ஒட்டப்பட்டுள்ளது. அதாவது கீரமங்கலத்தில் இதுவரை ஒரு டீயின் விலை ரூ.7-க்கு விற்பனை செய்யப்பட்டது. இனிமேல் ரூ.8-க்கு விற்பனை செய்யப்படும் என்றும், பார்சல் டீ ரூ.10-ல் இருந்து ரூ.2 விலை ஏற்றத்துடன் ரூ.12-க்கு விற்பனை செய்யப்படும் என்று டீ க்கடை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

Next Story