திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திரளான பக்தர்கள் தரிசனம்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 21 Aug 2019 3:30 AM IST (Updated: 21 Aug 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆவணி திருவிழா கொடியேற்றம்

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு, அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

பின்னர் கோவிலில் இருந்து கொடிப்பட்டம் புறப்பட்டு, ஒன்பது சந்திகளுக்கும் சென்று மீண்டும் கோவிலை சேர்ந்தது. தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதிகாலை 5.20 மணிக்கு கோவில் 2-ம் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில், காப்பு கட்டிய கற்பக வீரகுமார் பட்டர் இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா கொடியேற்றினார்.

தொடர்ந்து கொடிமர பீடத்துக்கு மஞ்சள், பால், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம், எண்ணெய், தைலம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களாலும், பூஜையில் வைக்கப்பட்ட கும்ப கலசத்தில் உள்ள புனித நீராலும் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கொடிமர பீடம் தர்ப்பை புற்களாலும், வண்ண மலர்களாலும், பட்டு ஆடைகளாலும் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்துக்கு சோடஷ தீபாராதனை நடந்தது.

சாமி தரிசனம்

விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் சுவாமிநாத தம்பிரான் சுவாமி, கோவில் இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர் செல்வராஜ், தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன், ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார், இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், பா.ஜ.க. தேசிய துணை தலைவர் துஷ்யந்த்குமார் கவுதம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சந்தானகுமார், எஸ்.சி. ஆணைய துணை தலைவர் முருகன், முன்னாள் அறங்காவலர் ராமச்சந்திரன், இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ரவி கிருஷ்ணன், கோவில் கண்காணிப்பாளர்கள் சுப்பிரமணியன், மாரிமுத்து, மோகன்ராஜ், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மாலையில் அப்பர் சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வீதிகளில் உழவாரப்பணி செய்த பின்னர் கோவிலை சேர்ந்தார். இரவில் ஸ்ரீபெலிநாயகர், அஸ்திரதேவருடன் யானை தந்தப்பல்லக்கில் கோவிலில் இருந்து புறப்பட்டு, ஒன்பது சந்திகளில் உலா வந்த பின்னர் கோவிலை சேர்ந்தார்.

பக்தி சொற்பொழிவு

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். கோவில் வளாகத்தில் உள்ள சிங்கப்பூர் கோவிந்தசாமிபிள்ளை கலையரங்கில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இன்னிசை, தேவார இன்னிசை, திருவாசகம் முற்றோதுதல், கலைநிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.

2-ம் நாளான இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், வள்ளி அம்பாள் சிறிய பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. இரவு 7 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. 10-ம் நாளான வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Next Story