தர்மபுரி மாவட்டத்தில் மத்தியக்குழுவினர் ஆய்வு


தர்மபுரி மாவட்டத்தில் மத்தியக்குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 21 Aug 2019 3:00 AM IST (Updated: 21 Aug 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் நீர்மேலாண்மை திட்டங்களின் செயல்பாடு குறித்து மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் ஜல்சக்தி அபியான் திட்டம் மற்றும் நீர்மேலாண்மை திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சக இணைச்செயலாளர் இந்தர் தமீஜா தலைமையிலான மத்திய குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த மத்திய ஆய்வுக்குழுவில் மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சக உழவர் நலத்துறை இயக்குனர் எஸ்.ருக்மணி, மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சக துணை செயலாளர் சரங்கதர் நாயக், மத்திய சுற்றுச்சூழல் வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சக துணை செயலாளர் எஸ்.கே.பரிடா, சமூகநீதி மற்றும் அதிகார மளித்தல் துணை செயலாளர் சஞ்சய் கோலி, மத்திய ஜல் சக்தி அமைச்சக நீர்வளம் நதி அபிவிருத்தி மற்றும் கங்கா புத்துணர்ச்சி துறை தொழில்நுட்ப அலுவலர்கள் ஆர்.ஆறுமுகம், எஸ்.கே.சுக்லா, விஞ்ஞானிகள் ஜோசப்,விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த மத்திய குழுவினர் தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி முன்னிலையில், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா சாலூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் 2 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் பணி, பையர்நத்தம் ஏரியில் குடிமராமத்து பணி ஆகியவற்றை தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து தென்கரைக்கோட்டையில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது மத்தியகுழுவின் தலைவர் இந்தர் தமீஜா கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை திட்டங்கள் குறித்து 2-ம் கட்டமாக நேரில் ஆய்வு நடத்தி வருகிறோம். மழை நீர் சேகரிப்பு திட்டம் மற்றும் நீர் மேலாண்மை திட்டத்தை தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் கட்டாயம் அமைக்கப்பட வேண்டும். ஆழ்துளை கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர்செறிவூட்டும் திட்டங்களை அமைத்து நீர் மேலாண்மை பணியை சிறப்பாக செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், தாசில்தார் இளஞ்செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகாலிங்கம், ரவிச்சந்திரன், அருள்மொழிதேவன், விமலன்,ஜெயராமன் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story