கட்டிட காண்டிராக்டர் கொலை வழக்கு: வாலிபருக்கு ஆயுள் தண்டனை


கட்டிட காண்டிராக்டர் கொலை வழக்கு: வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 20 Aug 2019 10:30 PM GMT (Updated: 20 Aug 2019 8:24 PM GMT)

கட்டிட காண்டிராக்டரை அடித்து கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து காரைக்கால் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

காரைக்கால்,

காரைக்கால் நேருநகர் பாரதியார் வீதி பிள்ளையார் கோவில் அருகே வசித்து வந்தவர் சண்முகம் (வயது50). கட்டிட காண்டிராக்டர். இவர், தினசரி மது குடித்து விட்டு வீட்டில் வந்து மனைவியுடன் சண்டை போடுவதுடன் அடித்து துன்புறுத்தியும் வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 24.3.2014 அன்று வழக்கம் போல், மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்று, மனைவி செபஸ்தியம்மாளை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால், கணவரோடு கோபித்துகொண்டு அருகில் உள்ள தாய் வீட்டுக்கு செபஸ்தியம்மாள் சென்றுவிட்டார்.

நடந்த சம்பவம் குறித்து கூறியதை தொடர்ந்து செபஸ்தியம்மாளின் சகோதரர் சீமோன்ராஜ் என்பவரின் மகன் மணிகண்டன்(27) சண்முகம் வீட்டுக்கு சென்று, அவரை கட்டையால் அடித்தும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்துள்ளார். இது பற்றிய விவரம் அறிந்த செபஸ்தியம்மாள், அவரது தாய் அந்தோணியம்மாள், சீமோன்ராஜ், இவரது மற்றொரு மகன் விக்னேஷ் ஆகியோர் சேர்ந்து, சண்முகத்தை யாரோ அடித்து கொலை செய்ததாக நாடகமாடினர்.

காண்டிராக்டர் சண்முகம் படுகொலையில் 5 பேருக்கும் தொடர்பு உள்ளதை அறிந்த காரைக்கால் நகர போலீசார், அவர்களை கைது செய்து மாவட்ட நீதிமன்றத்தில் அஜர்படுத்தினர். இந்த வழக்கு 5 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், நேற்று இறுதி விசாரணை நடந்தது.

விசாரணை முடிவில், காண்டிராக்டர் சண்முகத்தை அடித்து, கொலை செய்தது வாலிபர் மணிகண்டன் என நிரூபிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், விதித்து நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்தார். அபராதம் கட்டத்தவறினால், மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் மற்ற 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story