ஆம்பூர் அருகே கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; ரெயில்வே தண்டவாளத்தில் உடல் வீச்சு
ஆம்பூர் அருகே கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை ரெயில்வே தண்டவாளத்தில் வீசிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆம்பூர்,
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி பச்சகுப்பம் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தையொட்டி சுமார் 100 அடி தூரத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஒரு கால், ஒரு கை துண்டான நிலையில் பிணமாக கிடந்துள்ளார். தண்டவாளத்தில் உடல் கிடந்ததால் அது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு ரெயில் நிலைய அதிகாரி தகவல் அளித்தார்.
அதன்பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டதற்கான தடயங்களை கண்டறிந்தனர். இதனால் அந்த பெண் ரெயிலில் அடிபட்டு இறக்கவில்லை என்பதும் யாரோ பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, அதனை மறைக்க ரெயில்வே தண்டவாளத்தில் உடலை வீசிவிட்டு சென்று இருப்பதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து ரெயில்வே போலீசார், ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கொலை செய்யப்பட்ட பெண் அந்த பகுதியை சேர்ந்தவர் இல்லை என்பதும், காலையில் 4 பேர் அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது.
மேலும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து சேலையால் கழுத்தை இறுக்கி வேறு எங்காவது கொலை செய்துவிட்டு இங்கு வந்து தண்டவாளத்தில் வீசியிருக்கலாமா? என்ற சந்தேகமும் நிலவுகிறது. இந்த நிலையில் உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே அது குறித்த விவரம் தெரியவரும்.
இந்த நிலையில் அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து அறிவதற்காக பல்வேறு போலீஸ் நிலையங்களில் காணாமல் போன பெண் குறித்த புகார்களை சேகரித்து அந்த புகைப்படங்களை பிணத்துடன் ஒப்பிட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story