ஆம்பூரில் பள்ளிகளில் தேங்கி நிற்கும் மழைநீர் - மாணவர்கள் அவதி


ஆம்பூரில் பள்ளிகளில் தேங்கி நிற்கும் மழைநீர் - மாணவர்கள் அவதி
x
தினத்தந்தி 21 Aug 2019 4:15 AM IST (Updated: 21 Aug 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் பகுதியில் உள்ள பள்ளிகளில் தேங்கி நிற்கும் மழைநீரால் மாணவர்கள் அவதி அடைந்துள்ளனர்.

ஆம்பூர்,

ஆம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக கானாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழைநீர் ஊருக்குள் புகுந்தது. மேலும் நகரம் மற்றும் கிராம பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

இந்தநிலையில் ஆம்பூர் அருகே பெரியாங்குப்பத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் நுழைவு வாயிலில் மழைநீர், குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் பெரும் அவதிப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பள்ளி மைதானத்தில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் மாதனூர் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

மைதானத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மாணவர்களை விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் மாதனூர் அரசு பள்ளியில் கடந்த ஆண்டு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கே.சி.வீரமணி மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.5 லட்சம் ஒதுக்குவதாகவும், அதனை மைதானத்தை தரைக்கல் அமைக்கப்படும் என கூறியிருந்தார். அதனை அமைச்சர் உடனடியாக நிதி ஒதுக்கி பள்ளி வளாகத்தில் தரைக்கல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதேபோல் வாணியம்பாடி கோணாமேடு அரசு நகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்திலும் மழைநீர் தேங்கி உள்ளது. அதனையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story