திருப்பத்தூர் அருகே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பானை குறியீடு கண்டெடுப்பு
திருப்பத்தூர் அருகே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பானை குறியீடு கண்டெடுக்கப்பட்டது.
திருப்பத்தூர்,
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி உதவி பேராசிரியர் ஆ.பிரபு மற்றும் சு.சிவசந்திரகுமார், ஆய்வு மாணவர்கள் பொ.சரவணன், ரா.சந்தோஷ் ஆகியோர் ஏலகிரிமலை சரிவில் அமைந்துள்ள குண்டுரெட்டியூர் காட்டு பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குறியீட்டுடன் கூடிய பானை ஓடு மற்றும் புழங்கு பொருட்களை கண்டெத்துள்ளனர்.
இதுகுறித்து உதவி பேராசிரியர் ஆ.பிரபு கூறியதாவது :-
திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் வழியில் உள்ள மலையடிவார கிராமம் குண்டுரெட்டியூர். இங்கு கடந்த ஆண்டு எங்களது குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டதில் பல்வேறு தொல்லியல் தடயங்கள் கண்டறியப்பட்டன. தற்போது 2-வது கட்ட மேற்பரப்பு களஆய்வு மேற்கொள்ள அவ்விடத்திற்கு சென்றோம். அங்கு பல்வேறு தொல்பொருட்கள் கிடைத்தன.
அதாவது, உடைந்த சுடுமண் புகைப்பான், குறியீட்டுடன் கூடிய கருப்பு, சிவப்பு பானை ஓடு, தந்தத்தால் ஆபரணம் செய்கையில் எஞ்சிய துண்டு, நெசவு செய்ய பயன்படும் ‘தக்ளி’, சுடுமண் மணிகள், வண்ணம் தீட்டப்பட்ட களிமண் ஜாடிகளின் கைப்பிடி, சுடுமண் தாங்கிகள் ஆகிய அரிய பொருட்கள் கிடைத்தன.
இப்பொருட்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது ‘குறியீட்டுக் கீறல்’ அடங்கிய பானை ஓடாகும். இப்பானை ஓட்டில் அரிய வகை குறியீடு கீறப்பட்டுள்ளது. அதன் கீழே வண்ண சாந்தினால் கோடுகள் வரையப்பட்டுள்ளன. இக்கீறல் குறிக்கும் பொருள் இன்னதென உறுதியாக கூற இயலவில்லை. கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட இப்பானை ஓடானது ஏறக்குறைய 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும். அதாவது சங்க காலத்தை சேர்ந்த மக்களின் புழங்கு பொருளாக இருந்துள்ளது.
மேலும் ஆபரணங்கள் செய்ய பயன்படும் சுடுமண் மணிகளும் இங்கு கிடைத்துள்ளன. ராட்டையில் நூல் நூற்கும் வழக்கத்திற்கு முன் கையாலேயே நூல் நூற்க பயன்பட்ட ‘சுடுமண் தக்ளி’ கிடைத்திருப்பது இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் நெசவு தொழில் நுட்பம் அறிந்தவர்கள் என்பதற்கு சான்றாக உள்ளது.
பழந்தமிழர்கள் இயற்கையாக கிடைக்கக் கூடிய பல பொருட்களை கொண்டு செய்யப்பட்ட ஆபரணங்களால் தங்களை அழகுபடுத்தி கொண்டுள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில் இருந்து இதற்கு சான்றுகள் கிடைத்துள்ளன. அவ்வகையில் இங்கு அறுத்தெடுக்கப்பட்டு ஆபரணம் செய்கையில் எஞ்சிய தந்தத்தின் ஒரு துண்டும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆகவே தொடர்ந்து இப்பகுதியில் கிடைக்கும் சான்றுகள் யாவும் தொல்லியல் துறை முறையான ஆய்வு மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தினை உணர்த்துவதாகவே உள்ளது. வட தமிழகத்தின் தொன்மையினை பறைசாற்றிட தமிழர்களின் வாழ்வியலை இவ்வுலகிற்கு உணர்த்திட தமிழக அரசு, தொல்லியல் துறையினர் இப்பகுதியில் விரைவில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கள ஆய்வு பொருட்கள் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் தொல்லியல் துறை உதவி இயக்குனர் ர.பூங்குன்றன், பானை குறியீட்டில் உள்ள கீறல் நீர்வாழ் உயிரினமான முதலை, மீன், ஆமை இவற்றில் ஒன்றினை குறிப்பதாக கொள்ளலாம், இவை வளமையின் குறியீடாகும், இப்பானை ஓடானது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
வரலாற்று பேராசிரியர், தொல்லியல் ஆர்வலருமான சேகர் கூறுகையில், “இங்கு கிடைத்த பொருட்கள் கவனத்திற்கு உரியவையாகும், ஏறத்தாழ 2 ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்தவை, தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள உகந்த களமாக இவ்விடம் தெரிகிறது, சங்க கால மக்கள் வாழ்ந்த இடமாக இவை அறியப்படுகிறது” என்றார்.
Related Tags :
Next Story