சேத்துப்பட்டு அருகே குப்பைமேட்டில் கிடந்த இரும்பு பெட்டியில் தங்கம், அலுமினிய நாணயங்கள்


சேத்துப்பட்டு அருகே குப்பைமேட்டில் கிடந்த இரும்பு பெட்டியில் தங்கம், அலுமினிய நாணயங்கள்
x
தினத்தந்தி 20 Aug 2019 10:00 PM GMT (Updated: 20 Aug 2019 8:26 PM GMT)

சேத்துப்பட்டு அருகே குப்பை மேட்டில் கிடந்த இரும்பு பெட்டியில் தங்கம் மற்றும் அலுமினிய நாணயங்கள் இருந்தன.

சேத்துப்பட்டு, 

சேத்துப்பட்டு அருகே ஆவணியாபுரத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் வீடு ஒன்று கட்டி வருகிறார். இந்த வீட்டின் பின்புறம் உள்ள முட்புதரில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைக்குள் பழங்கால இரும்புப்பெட்டி உள்ளதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சேத்துப்பட்டு தாசில்தார் சுதாகர் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு சென்றனர். பின்னர் குப்பைகளுக்கு இடையில் கிடந்த பழங்காலத்தில் பணத்தை வைத்து பாதுகாக்கும் இரும்பிலான பெட்டியை மீட்டு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் இதுகுறித்து வேலூர் அருங்காட்சியகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தாசில்தார் தலைமையில் வேலூர் அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் அந்த பெட்டியை திறந்து பார்த்தனர். அதில் 43 கிராம் எடை கொண்ட 82 தங்க குண்டு மணிகள், 3 கிராம் தங்கத்தோடு, 56 கிராம் எடையுள்ள 17 செம்பு பொருட்கள், 23 கிராம் எடையுள்ள இதர பொருட்கள் மற்றும் 1 கிலோ 686 கிராம் எடையுள்ள பழைய அலுமினிய நாணயங்கள் இருந்தது.

இதையடுத்து அந்த பெட்டியில் உள்ள பொருட்கள் போளூர் உதவி கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப் பட்டது.

Next Story