மகன் தாக்க முயன்ற போது, தப்பி ஓடிய விஞ்ஞானி சுவரில் மோதி பரிதாப சாவு
மகன் தாக்க முயன்றபோது, தப்பி ஓடிய விஞ்ஞானி சுவரில் மோதி பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
துடியலூர்,
கோவையை அடுத்த துடியலூர் சுப்பிரமணியம்பாளையம் சத்யா நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 60). இவர் புதுச்சேரி மாநிலத்தில் மத்திய ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி கோதை (59). இவர் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்கள் 2 பேரும் கடந்த சில மாதங்களாக மனநலம் தொடர்பாக சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.
இவர்களுடைய மகன் மோகன்குமார் (29). இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு தற்போது சி.ஏ. படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை கோதை மாத்திரை சாப்பிட மறந்து விட்டார். எனவே அவரை கண்டித்து கோவிந்தராஜ் தாக்கியதாக தெரிகிறது. உடனே மோகன்குமார் தந்தையை தடுத்து உள்ளார். ஆனால் கோவிந்தராஜ், தனது மகன் மோகன்குமாரையும் தாக்கி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மோகன்குமார், அருகில் கிடந்த சுத்தியலால் கோவிந்தராஜின் காலில் தாக்கினார். மீண்டும் அவர் தனது தந்தையை தாக்க முயன்றார். எனவே அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக கோவிந்தராஜ் ஓடினார். அப்போது எதிர்பாராதவிதமாக சுவரில் தலை மோதியதால் கோவிந்தராஜ் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்தார். உடனே மோகன்குமார், அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்த தவவலின்பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு மணி, துடியலூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் சிவசாமி மற்றும் போலீசார், கொலைக்குற்றம் ஆகாத மரணம் 304(2) என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மோகன்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story