சேலம் அருகே லாரி மோதி மூதாட்டி பலி; பருப்பு மூட்டைகள் சிதறியதால் போக்குவரத்து பாதிப்பு


சேலம் அருகே லாரி மோதி மூதாட்டி பலி; பருப்பு மூட்டைகள் சிதறியதால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 21 Aug 2019 3:15 AM IST (Updated: 21 Aug 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே லாரி மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார். மேலும் லாரி கவிழ்ந்து, பருப்பு மூட்டைகள் சிதறியதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

சேலம்,

சேலம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினம், விவசாயி. இவருடைய மனைவி நாகம்மாள்(வயது 63). இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். நேற்று காலை 6.30 மணி அளவில் மேட்டுப்பட்டியில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் பால் ஊற்றிவிட்டு நாகம்மாள் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

சேலம்-அரூர் மெயின் ரோட்டில் சென்ற போது அரூரில் இருந்து சேலம் நோக்கி பருப்பு பாரம் ஏற்றி வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த நாகம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனிடையே விபத்தை ஏற்படுத்திய லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த புளியமரத்தில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரியில் இருந்த பருப்பு மூட்டைகள் சாலையில் சிதறி கிடந்தன. இதனால் சேலம்-அரூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வீராணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் நாகம்மாளின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் ரோட்டில் சிதறி கிடந்த பருப்பு மூட்டைகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் காலை 6.30 மணி முதல் 7 மணி வரை ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story