பரங்கிப்பேட்டையில், வீடு புகுந்து 7½ பவுன் நகை திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


பரங்கிப்பேட்டையில், வீடு புகுந்து 7½ பவுன் நகை திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Aug 2019 4:00 AM IST (Updated: 21 Aug 2019 2:43 AM IST)
t-max-icont-min-icon

பரங்கிப்பேட்டையில் வீடு புகுந்து 7½ பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பரங்கிப்பேட்டை,

பரங்கிப்பேட்டை மூக்கனாங்கிணற்று சந்து பகுதியை சேர்ந்தவர் முகமது உசேன். இவருடைய மனைவி சுமையாபானு (வயது 28). சம்பவத்தன்று இவர் அப்பகுதியை சேர்ந்த தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டு பீரோவில் இருந்த 7½ பவுன் நகை மற்றும் ரூ.2 ஆயிரத்து 500 ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை.

அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் பரங்கிப்பேட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சுமையாபானு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றதை பார்த்த மர்மநபர்கள், கள்ளச்சாவி போட்டு கதவை திறந்து வீட்டுக்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றது தெரிந்தது. திருடு போன நகையின் மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story