பண்ருட்டியில், ஓடும் பஸ்சில் பெண்களிடம் நகை அபேஸ் செய்த 2 பேர் கைது


பண்ருட்டியில், ஓடும் பஸ்சில் பெண்களிடம் நகை அபேஸ் செய்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 Aug 2019 4:15 AM IST (Updated: 21 Aug 2019 2:43 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டியில் ஓடும் பஸ்சில் பெண்களிடம் நகை அபேஸ் செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இருவரும் நகைக்கடையில் திருடியபோது கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினர்.

பண்ருட்டி,

பண்ருட்டி வி.எஸ்.பி. நகரை சேர்ந்தவர் ஜோஷிடாய். இவருடைய மனைவி ஜீவக்கொடி(வயது 55). இவர், திருக்கோவிலூரில் இருந்து பண்ருட்டிக்கு தனியார் பஸ்சில் வந்தார். பஸ் நிலையத்தை வந்தடைந்ததும், ஜீவக்கொடி தனது கைப்பையை பார்த்தார். அப்போது அதில் இருந்த 3 பவுன் நகையை காணவில்லை. இதேபோல் கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு வந்த பஸ்சில் பயணித்த கடலூர் சாவடியை சேர்ந்த சீனிவாசன் மனைவி சுகன்யா என்பவரிடம் இருந்து 5 பவுன் நகையை மர்மநபர்கள் அபேஸ் செய்து சென்றனர். இதேபோல் பண்ருட்டி வ.உ.சி. வீதியில் உள்ள ஒரு நகைக்கடையில் 2 பெண்கள், நகை வாங்குவதுபோல் நடித்து 4¾ பவுன் நகையை திருடிச் சென்றனர். இதுகுறித்த தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஓடும் பஸ் மற்றும் நகைக்கடையில் கைவரிசை காட்டியவர்களை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் தனவள்ளி, தேன்மொழி, பிரசாந்த், ஆனந்தன், மணிகண்டன், சபரிநாதன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் முதற்கட்டமாக நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தனர். அப்போது நகை திருடிய 2 பெண்கள் அடையாளம் தெரிந்தது. விசாரணையில் அவர்கள், திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த பழனிசாமி மனைவி செல்வி(45), பெருமாள் மனைவி ரத்னா என்கிற ரத்தினம்(45) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில் நகைக்கடையில் மட்டுமின்றி ஜீவக்கொடி, சுகன்யா ஆகியோரிடம் நகையை அபேஸ் செய்ததையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரிடம் இருந்த 12¾ பவுன் நகை மீட்கப்பட்டது. இதேபோல் பல ஊர்களில் இதேபோல் நகை திருடி இருவரும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது வேலூர், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் நகை திருட்டு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story