காஞ்சீபுரம் அருகே தேங்காய் வியாபாரி வெட்டிக்கொலை


காஞ்சீபுரம் அருகே தேங்காய் வியாபாரி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 21 Aug 2019 3:33 AM IST (Updated: 21 Aug 2019 3:33 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே தேங்காய் வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த கோவிந்தவாடியை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 35). இவர் மீது காஞ்சீபுரம் அடுத்த பாணாவரம் மற்றும் காஞ்சீபுரம் பகுதியில் கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரவுடி புருஷோத்தமன் ஜெயிலில் இருந்து வெளியே வந்தார்.

இந்த நிலையில் புருஷோத்தமன் குடிபோதையில் நேற்று காலை தனது நண்பர்களுடன் கோவிந்தவாடி கோவில் அருகே ரோட்டில் வருவோர், செல்வோரை கத்தியால் சரமாரியாக வெட்டினார்.

இதில் கோவில் அருகே தேங்காய் கடை வைத்திருக்கும் கோவிந்தவாடி காவாங்கரையை சேர்ந்த தனஞ்செழியன் (55) படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் கோவிந்தவாடி கிராமத்தை சேர்ந்த தேவகி (65), சுபாஷினி (40), ராதாம்மாள் (50), விஸ்வநாதன் (55), யசோதரன் (25), தட்சிணாமூர்த்தி (28) ஆகியோர் மீதும் அந்த கும்பல் வெட்டியதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தனஞ்செழியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலைவெறி தாக்குதலை நடத்திவிட்டு அந்த கும்பல் கோவிந்தவாடியில் இருந்து புறப்பட்டு அரக்கோணம் வழியாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை சரமாரியாக வெட்டிக்கொண்டே சென்றதாக கூறப்படுகிறது.

ரவுடி புருஷோத்தமன் மற்றும் அவரது நண்பர்களை பிடிக்க தனி போலீஸ் படையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் நியமித்து உத்தரவிட்டுள்ளார். இந்த தனி போலீஸ் படையினர் வேலூர் மாவட்டம், அரக்கோணம் போன்ற பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட தனஞ்செழியனுக்கு ஒரு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கொலை சம்பவத்தையடுத்து கோவிந்தவாடி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story