அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ஏற்று ராஜ்தாக்கரே நாளை விசாரணைக்கு ஆஜராகிறார்
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ஏற்று நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே நாளை விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.
மும்பை,
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ஏற்று நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே நாளை விசாரணைக்கு ஆஜராக உள்ளார். போராட்டத்தை தவிர்க்குமாறு அவர் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.
சம்மன்
மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், சிவசேனா மூத்த தலைவருமான மனோகர் ஜோஷியின் மகன் உன்மேஷ் ஜோஷி. இவர் கோகினூர் சி.டி.என்.எல். என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில், மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்ராக்கரே பங்குதாரராக இருந்தபோது, ஐ.எல். அண்ட் எப்.எஸ். நிறுவனம் ரூ.450 கோடிக்கு கடன் மற்றும் பங்கு மூதலீடு செய்து இருந்தது. இதில் பணமோசடி நடந்ததாக அமலாக்கத்துறை உன்மேஷ் ஜோஷிக்கு சம்மன் அனுப்பியதன் பேரில் அவர் நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜரானார்.
இதேபோல நாளை (வியாழக்கிழமை) நேரில் ஆஜராகுமாறு ராஜ்தாக்கரேக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
போராட்ட அறிவிப்பு
பிரதமர் மோடிக்கு எதிராக போராடி வருவதால் பழைய வழக்கில் ராஜ்தாக்கரேக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாகவும், தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட இருப்பதாகவும் கட்சியின் செய்தி தொடர்பாளர் சந்தீப் தேஷ்பாண்டே கூறினார். மேலும் ராஜ்தாக்கரே ஆஜராக உள்ள நாளில் லட்சக்கணக்கான தொண்டர்கள் மும்பையில் குவிவார்கள் என்பதால், பொதுமக்கள் அவசியம் இன்றி வெளியே வர வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார். தானே மாவட்டத்திலும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த பிரச்சினையில் நவநிர்மாண் சேனா தொண்டர்கள் பொதுமக்களின் அமைதியை கெடுக்கும் வகையில் நடந்து கொண்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த பரபரப்பான நிலையில் ராஜ்தாக்கரே நேற்று கட்சி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது அமலாக்கத்துறை சம்மனை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நாளை ஆஜராகிறார்
பின்னர் கட்சியின் செய்தி தொடர்பாளர் சந்தீப் தேஷ்பாண்டே நிருபர்களிடம் கூறியதாவது:-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ஏற்று ராஜ்தாக்கரே நாளை ஆஜராக உள்ளார். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், போராட்டங்கள் எதுவும் நடத்த வேண்டாம் என்று தொண்டர்களை ராஜ்தாக்கரே கேட்டுக்கொண்டு உள்ளார். மேலும் தானே மாவட்டத்தில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்த முழு அடைப்பு போராட்டமும் திரும்ப பெறப்பட்டு உள்ளது.
எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மட்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி வருகிறது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். இதை எங்களது கட்சி எதிர்கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story