ஓடும் ரெயிலில் இருந்து பார்சல்களை கீழே தள்ளி ரூ.8 லட்சம் பொருட்களை கொள்ளையடித்த சென்னையை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது


ஓடும் ரெயிலில் இருந்து பார்சல்களை கீழே தள்ளி ரூ.8 லட்சம் பொருட்களை கொள்ளையடித்த சென்னையை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 21 Aug 2019 5:30 AM IST (Updated: 21 Aug 2019 3:56 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் ரெயிலில் இருந்து பார்சல்களை கீழே தள்ளிவிட்டு ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்த சென்னையை சேர்ந்தவர் உள்பட 3 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

ஓடும் ரெயிலில் இருந்து பார்சல்களை கீழே தள்ளிவிட்டு ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்த சென்னையை சேர்ந்தவர் உள்பட 3 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

பார்சல்கள் கொள்ளை

சென்னையில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14-ந் தேதி மும்பை சி.எஸ்.எம்.டி. வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் ‘சீல்’ வைக்கப்பட்ட பெட்டியில் இருந்து பார்சல்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. கொள்ளைபோன பார்சல்களில் செல்போன்கள், தங்கநகைகள் மற்றும் 20 ரூபாய் நோட்டு கட்டுகள் என ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் இருந்தன.

இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், ரெயில்வே போலீசார் ரெயில்நிலைய கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, கல்யாண் ரெயில்நிலையத்தில் 5 கொள்ளையர்கள் ரெயிலில் ஏறியது தெரியவந்தது. 5 பேரும் பார்சல்கள் இருந்த பெட்டியின் அருகில் உள்ள பெட்டியில் ஏறியுள்ளனர். ரெயில் சயான் அருகே வந்தபோது, பார்சல்கள் இருந்த பெட்டிக்குள் நுழைந்த அவர்கள், அதில் இருந்த பார்சல்களை ஓடும் ரெயிலில் இருந்து தண்டவாளத்தில் தள்ளிவிட்டு உள்ளனர். ரெயில் தாதர் சென்றவுடன் அதில் இருந்து இறங்கி டாக்சி மூலம் சயான் பகுதிக்கு வந்து தள்ளிவிட்ட பார்சல்களை எடுத்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.

3 பேர் கைது

இதில், ரெயில்வே போலீசார் பார்சல்கள் கொள்ளையடிக்கப்பட்ட நள்ளிரவு நேரத்தில் சயான் ரெயில் நிலையப்பகுதியில் செல்போன் பயன்படுத்தியவர்களின் விவரங்களை ஆய்வு செய்தனர். அதன் மூலம் கொள்ளையன் ஒருவனின் செல்போன் எண்ணை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த செல்போன் எண்ணின் இருப்பிடத்தை கண்டுபிடித்து அகமது அலி, விஜய் ஜாதவ் ஆகிய 2 கொள்ளையர்களை மும்பையில் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கொள்ளையில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த சங்கர் என்பவரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய சபிக், நூர் அலி ஆகிய 2 பேரை தேடிவருகின்றனர்.

சென்னையை சேர்ந்த சங்கர் மும்பை காட்கோபரில் சிறிது காலம் வசித்தவர் ஆவார். அவர் மீது 50-க்கும் மேற்பட்ட திருட்டு, கொள்ளை வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story