ஓட்டல் அதிபர் கொலை முயற்சி வழக்கில் தாதா சோட்டா ராஜனுக்கு 8 ஆண்டு கடுங்காவல் மும்பை கோர்ட்டு தீர்ப்பு
ஓட்டல் அதிபர் கொலை முயற்சி வழக்கில் தாதா சோட்டா ராஜனுக்கு 8 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து மும்பை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
மும்பை,
ஓட்டல் அதிபர் கொலை முயற்சி வழக்கில் தாதா சோட்டா ராஜனுக்கு 8 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து மும்பை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
மும்பை தாதா
மும்பையை சேர்ந்த நிழல் உலக தாதாக்களில் ஒருவர் சோட்டா ராஜன். பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட இவர், வெளிநாட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்தார். இந்தநிலையில் இந்தோனேசியா நாட்டின் பாலி தீவில் பதுங்கி இருந்த சோட்டா ராஜன் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நாடு கடத்தப்பட்டு இந்தியா கொண்டுவரப்பட்டார்.
விசாரணைக்கு பிறகு அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சோட்டா ராஜன் மீது பத்திரிகையாளர் ஜே டே கொலை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன.
8 ஆண்டு கடுங்காவல்
இந்தநிலையில் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையை சேர்ந்த ஓட்டல் அதிபரான பி.ஆர்.ஷெட்டி என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். இந்த கொலை முயற்சி வழக்கில் சோட்டா ராஜன் மற்றும் நித்யானந்த் நாயக், செல்வின் டேனியல், ரோகித் தங்கப்பன் ஜோசப், திலீப் உபாத்யாய், தல்விந்தர் சிங் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சோட்டா ராஜன் மற்றும் 5 பேர் மீது மராட்டிய திட்டமிட்ட குற்றத்தடுப்பு சட்டத்தின் (மோக்கா) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை மும்பையில் உள்ள ‘மோக்கா‘ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை நிறைவில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது சோட்டா ராஜன் உள்பட 6 பேர் மீதான குற்றச்சாட்டு தகுந்த ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 6 பேருக்கும் 8 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். மேலும் குற்றவாளிகள் அனைவருக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story