சத்திரப்பட்டி பகுதியில், திடீர் வெடி சத்தத்தால் பொதுமக்கள் பீதி
சத்திரப்பட்டி அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
சத்திரப்பட்டி,
சத்திரப்பட்டி அருகே 16 புதூர், கொத்தயம், அமரபூண்டி உள்பட ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று 16 புதூர் பகுதியில் மதியம் 2.30 மணிக்கு திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து மக்கள் வீதிக்கு வந்து பார்த்தபோது வானில் ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்றுள்ளது. பின்னர் அடுத்த 5 நிமிடம் கழித்து மீண்டும் குண்டு வெடித்தது போன்ற பயங்கர சத்தம் கேட்டுள்ளது.
வானில் பறந்த சென்ற ஹெலிகாப்டர் வெடித்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது. இதுகுறித்து 16 புதூரை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, மதிய வேளையில் அடுத்தடுத்து இரண்டு பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. எனவே நிலநடுக்கம் ஏதும் ஏற்பட்டதா என அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தோம். அப்போது வானில் ஹெலிகாப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்தது. என்றனர்.
இதேபோல் அமரபூண்டி, கள்ளிமந்தயம், இடையக்கோட்டை பகுதிகளிலும் இந்த பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்களும் தெரிவித்துள்ளனர். இதில் அமரபூண்டி பகுதியில் வெடிசத்தம் கேட்டபோது வீட்டில் அதிர்வு ஏற்பட்டதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். எனவே இது குறித்து அறிவியல் ஆய்வாளர்கள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். ஏற்கனவே வேடசந்தூர் ரெங்கமலை பகுதியில் அடிக்கடி வெடிச்சத்தம், ஹெலிகாப்டர், விமானங்கள் தாழ்வாக பறந்து செல்லும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. எனவே பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் நடக்கும் இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story