நகைக்கடையில் புகுந்து சுட்டுக் கொல்ல முயன்ற கொள்ளையர்களை விரட்டி அடித்த வீரத்தம்பதி நாற்காலிகளை தூக்கி வீசி எறிந்தனர்


நகைக்கடையில் புகுந்து சுட்டுக் கொல்ல முயன்ற கொள்ளையர்களை விரட்டி அடித்த வீரத்தம்பதி நாற்காலிகளை தூக்கி வீசி எறிந்தனர்
x
தினத்தந்தி 22 Aug 2019 5:00 AM IST (Updated: 21 Aug 2019 11:37 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், நகைக்கடையில் புகுந்து சுட்டுக்கொல்ல முயன்ற கொள்ளையர்களை, நாற்காலிகளை தூக்கி வீசி எறிந்து தம்பதியினர் விரட்டி அடித்தனர்.

பெங்களூரு, 

பெங்களூருவில், நகைக்கடையில் புகுந்து சுட்டுக்கொல்ல முயன்ற கொள்ளையர்களை, நாற்காலிகளை தூக்கி வீசி எறிந்து தம்பதியினர் விரட்டி அடித்தனர்.

சுட்டுக்கொல்ல முயற்சி

பெங்களூரு வயாலிகாவல் அருகே வினாயகா சர்க்கிளில் ஆசீஷ் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. நேற்று காலையில் அவர் வழக்கம் போல நகைக்கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்தார். இந்த நிலையில், மதியம் 2.30 மணியளவில் ஆசீஷ், அவரது மனைவி ராக்கி ஆகிய 2 பேரும் கடையில் இருந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் கடைக்கு 3 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் தங்க சங்கிலி வேண்டும் என்று ஆஷிசிடம் கூறினார்கள். உடனே அவரும் தங்க சங்கிலியை எடுத்து காட்டுவதற்காக முயன்றார். அந்த சந்தர்ப்பத்தில் திடீரென்று மர்மநபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஆசீசை மிரட்டினார்கள்.

நகைகளை கொடுக்கும்படி துப்பாக்கி முனையில் அவரை மர்மநபர்கள் மிரட்டினார்கள். மேலும் கடையின் முன்பக்க கதவையும் பாதியளவு மூடினார்கள். இதனால் செய்வது அறியாமல் ஆசீஷ், அவரது மனைவி ராக்கி திகைத்தனர். அப்போது ஆசீஷ் சத்தம் போட்டு கூச்சலிட்டார். உடனே அவரை நோக்கி மர்மநபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ஒரு முறை சுட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரது மீது குண்டுபடாமல், கடையில் உள்ள சுவரில் குண்டு துளைத்தது.

போலீஸ் கமிஷனர் விசாரணை

உடனே கடையில் இருந்த நாற்காலிகளை தூக்கி கொள்ளையர்கள் மீது ஆசீஷ், அவரது மனைவி ராக்கி ஆகியோர் வீசினார்கள். இதனால் கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு மர்மநபர்கள் அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டனர். இதுபற்றி அறிந்ததும் நகைக்கடைக்கு சென்று மோப்ப நாய்களுடன் வயாலிகாவல் போலீசார் விரைந்து வந்தனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். மேலும் போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ், மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் சேத்தன்சிங் ராத்தோடு, மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் ஆகியோர் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் 3 நபர்கள் ஆசீஷ் கடைக்கு வந்தது தெரியவந்தது. அதே நேரத்தில் ஆசீஷ் கடையில் இருந்து மர்மநபர்கள் தங்க நகைகளை கொள்ளையடித்து செல்லவில்லை என்பதும், மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில், ஆசீஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதும் தெரியவந்தது. இதையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க நகைக்கடை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி, அதில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

2 தனிப்படைகள் அமைப்பு

இதுகுறித்து மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் சேத்தன்சிங் ராத்தோடு நிருபர்களிடம் கூறுகையில், “ஆசீஷ் கடைக்கு நகை வாங்குவதற்காக வந்த 3 மர்மநபர்கள், இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கடையில் இருந்த நகைகள் எதையும் மர்மநபர்களால் கொள்ளையடித்து செல்ல முடியவில்லை. நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டு மர்மநபர்கள் வந்தார்களா? அல்லது ஆசீசை கொலை செய்ய வந்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது“ என்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வயாலிகாவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து உரிமையாளரை சுட்டுக் கொல்ல முயன்றது, கொள்ளையர்களை வீரத்தம்பதியினர் விரட்டிய சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story