நீலகிரி மாவட்டத்தில், ரசாயன பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கக்கூடாது - கலெக்டர் எச்சரிக்கை


நீலகிரி மாவட்டத்தில், ரசாயன பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கக்கூடாது - கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 Aug 2019 10:45 PM GMT (Updated: 21 Aug 2019 7:17 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் ரசாயன பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கக்கூடாது என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா எச்சரித்து உள்ளார். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஊட்டி,

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின்போது விநாயகர் சிலைகளை வழிபாட்டிற்கு பின்னர் நீர் நிலைகளில் கரைக்கும் வழக்கம் உள்ளது. அவ்வாறு நீர் நிலைகளில் கரைக்கப்படும் விநாயகர் சிலைகள் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற ரசாயன பொருட்களால் செய்யப்பட்டு இருந்தாலோ அல்லது ரசாயன பொருட்களை அடிப்படையாக கொண்டு வர்ணம் பூசப்பட்டு இருந்தாலோ, அதில் காணப்படும் ரசாயன பொருட்கள் நீரில் கரைந்து நீர் நிலைகள் மாசடைய வாய்ப்பு உள்ளது. அந்த நீரை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பாதிப்படைய வாய்ப்பு இருக்கிறது.

இதனை தவிர்க்க நீர் நிலைகளை மாசுபடுத்தும் ரசாயன பொருட்களால் செய்யப்பட்ட மற்றும் ரசாயன பொருட்களை அடிப்படையாக கொண்டு வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை தவிர்ப்பது இன்றியமையாததாகும். இதை உறுதி செய்ய நீலகிரி மாவட்ட மக்கள் வருகிற 2-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின்போது பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் களிமண்ணால் செய்யப்பட்டது, சுடப்படாதது மற்றும் எவ்வித ரசாயன பொருள் கலவை அற்றதுமான கிழங்கு மாவு, மரவள்ளி கிழங்கில் இருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். இத்தகைய சிலைகளை நீர் நிலைகளில் நீரின் தரத்தை பாதிக்காத வகையில் கரைக்க முடியும்.

ரசாயனபொருட்களை அடிப்படையாக கொண்டு வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது தவிர்க்கப்பட வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகள் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிசால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடவும், நீர் நிலைகளில் கரைக்கவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையால் அனுமதிக்கப்படமாட்டாது. நீலகிரி மாவட்டத்தில் வழிபாட்டிற்கு பின்னர் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு என கண்டறியப்பட்ட இடங்களான குன்னூர் லாஸ் நீர்வீழ்ச்சி, ஊட்டி காமராஜ் சாகர் அணை, கூடலூர் இரும்பு பாலம் ஆறு, பந்தலூர் பொன்னானி ஆறு, கோத்தகிரி உயிலட்டி நீர்வீழ்ச்சி ஆகிய இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும்.

விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நீர் நிலைகளில் காணப்படும் நீரின் தரமானது விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பின்னரும், சிலைகளை கரைத்த பின்னரும் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கண்காணிக்கப்படும். மேலும் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட அனுதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே காவல்துறையின் உரிய அனுதி பெற்று வழிபட அனுமதிக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டின்போதும், விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் இடத்திலும் உருவாகும் திடக்கழிவுகளான கழிவு துணி, பூக்கள் போன்றவற்றை அவ்வப்போது அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேற்கண்ட கழிவுபொருட் களை எக்காரணத்தை கொண்டு எரிக்க கூடாது.

இவை சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா? என்று காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கண்காணிக்கும். இதனை மீறுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நடப்பாண்டு முதல் நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை பசுமை நீலகிரி முயற்சியின் ஒரு அங்கமாக செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பொதுமக்கள் விநாயகர் சிலைகளை ஏற்கனவே குறிப்பிடப்பட்ட பொருட்களால் மட்டுமே தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளுடன் விதை பந்துகளையும் அமைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனால் வழிபாட்டிற்கு பின்னர் விநாயகர் சிலைகளை தண்ணீரில் கரைக்கும்போது, விதைகள் பரவி முளைத்து மாவட்டத்தின் பசுமை வளையம் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story