மானிய தொகை பெற்று கழிப்பறை கட்டாதவர்கள் மீது நடவடிக்கை - புதுச்சேரி நகராட்சி ஆணையர் எச்சரிக்கை


மானிய தொகை பெற்று கழிப்பறை கட்டாதவர்கள் மீது நடவடிக்கை - புதுச்சேரி நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 22 Aug 2019 4:15 AM IST (Updated: 22 Aug 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

அரசின் மானிய தொகை பெற்று கழிப்பறை கட்டாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி நகராட்சி ஆணையர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூய்மை இந்தியா திட்டம் 2014-ம் ஆண்டு முதல் ஒரு மக்கள் இயக்கமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் வருகிற 2.10.2019-க்குள் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான, சுகாதாரமான கழிப்பறை வசதி ஏற்படுத்தி தந்து திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவது தான்.

இந்த திட்டத்தின் கீழ் கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு கழிப்பறை கட்டிக்கொள்ள முழு மானிய நிதிஉதவி அடிப்படையில் ரூ.20 ஆயிரம் வழங்க புதுவை அரசு முடிவெடுத்து புதுவை நகராட்சிக்கு உட்பட்ட 1724 பயனாளிகளுக்கு முதல் தவணை மானியமாக ரூ.10 ஆயிரம் வழங்கியது. இவர்களில் 1410 பேர் கழிப்பறைகள் கட்டி முடித்துள்ளனர். அவர்களுக்கு 2-வது தவணையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 314 பயனாளிகள் இதுவரை கழிப்பறை கட்டாமல் உள்ளனர். இதனால் புதுவை நகராட்சி திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதி என்ற சான்றிதழை பெற முடியாமல் உள்ளது. திறந்தவெளியில் மலம் கழிப்பதால் சுற்றுப்புறம் அசுத்தம் ஆவதோடு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக பயனாளிகளுக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினர் மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் இன்னும் 15 நாட்களுக்குள் கழிப்பறை கட்டி முடிக்க வேண்டும். இதன் மூலம் நகரம் சுத்தம் அடைவதோடு, மக்களின் சுகாதார நிலையும் மேம்படும். பயனாளிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் கழிப்பறை கட்டவில்லை என்றால் அவர்களுக்கு வழங்கப்பட்ட மானிய தொகை வட்டியுடன் வசூலிக்கப்படும். அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story