ஆனைமலை அருகே சம்பவம்: குழந்தையுடன் பெண் தீக்குளித்து தற்கொலை - கடிதம் சிக்கியது


ஆனைமலை அருகே சம்பவம்: குழந்தையுடன் பெண் தீக்குளித்து தற்கொலை - கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 22 Aug 2019 4:30 AM IST (Updated: 22 Aug 2019 5:57 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை அருகே குழந்தையுடன் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கடிதம் சிக்கியது.

ஆனைமலை,

கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த சுப்பேகவுண்டன்புதூரை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் ஈஸ்வரசாமி (வயது30). தேங்காய் உரிக்கும் தொழிலாளி. இவருக்கும் உறவினரான வாழைக்கொம்பு நாகூரை சேர்ந்த ராஜூ என்பவரது மகள் மாலதி (27) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதன்பிறகு ஈஸ்வரசாமியும், மாலதியும் சுப்பேகவுண்டன்புதூர் வடக்கு தெரு பகுதியில் உள்ள சொந்த வீட்டில் குடித்தனம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு 7 வயதில் சசிக்குமார் என்ற மகன் உள்ளார். சசிக்குமார் அங்குள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். ஒரு வயதில் மகாஸ்ரீ என்ற பெண் குழந்தையும் இருந்தது. மாலதி சிறுசேமிப்பு சீட்டு நடத்தி வந்துள்ளார். அவரிடம் அக்கம், பக்கத்தினர் சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் தேங்காய் உரிக்கும் வேலைக்காக ஈஸ்வரசாமி சக தொழிலாளர்களுடன் பழனிக்கு சென்று விட்டார். மகன் சசிக்குமார் பள்ளிக்கு சென்றுவிட்டார். மாலதி தனது மகளுடன் வீட்டில் இருந்தார். மாலை 3 மணிக்கு பக்கத்து வீட்டு பெண் ஒருவர், பொதுக்குழாயில் தண்ணீர் வந்ததால், அதுபற்றி சொல்வதற்காக மாலதியின் வீட்டுக்கு சென்றார். வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அவர்கள் சத்தம்போட்டு மாலதியை அழைத்துள்ளார். ஆனால் மாலதியிடம் இருந்து எந்த பதிலும் வராததால் சந்தேகத்துடன் வீட்டின் அறைக்குள் எட்டிப்பார்த்தார். அப்போது மாலதி தனது குழந்தையுடன், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டு பெண், அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் ஓடிவந்து பார்த்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் ஆனைமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள், கருகிய நிலையில் இருந்த மாலதி மற்றும் மகாஸ்ரீ ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது மாலதி கணவருக்காக எழுதிய கடிதம் சிக்கியது. அதில் அவர், என்னால் யார் மனமும் புண்படக்கூடாது. சீட்டு பணம் வீட்டில் உள்ளது. அனைவருக்கும் கொடுத்து விடவும். என்னை மன்னித்து விடுங்கள் மாமா என்று எழுதப்பட்டு இருந்தது. இது குறித்து போலீசார் கூறியதாவது:- தேங்காய் உரிக்கும் வேலைக்காக ஈஸ்வரசாமி புறப்பட்டபோது, சாப்பாடு செய்து இருக்கிறாயா? என்று மாலதியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் இல்லை என்று கூறியதால் ஈஸ்வரசாமி கோபித்துக்கொண்டு சென்று விட்டார்.

முன்னதாக அவர், தனது மாமியார் தைலாவை செல்போனில் தொடர்பு கொண்டு, மாலதி எனக்கு சாப்பாடு செய்து கொடுப்பதில்லை என்று புகார் கூறியுள்ளார். உடனே தைலா தனது மகள் மாலதியை தொடர்பு கொண்டு சாப்பாடு செய்து கொடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். கணவரும், தாயாரும் சாப்பாடு செய்து கொடுக்க வில்லை என்று கூறியதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மாலதி தனது குழந்தையுடன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் குழந்தையுடன், மாலதி பிணமாக கிடப்பதை பார்த்து, உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் கதறி அழுதனர். அப்போது அப்பகுதியினர் கூறுகையில், ஈஸ்வரசாமி, மாலதி தம்பதியர் மிக சந்தோஷமாகவே குடும்பம் நடத்தி வந்தனர். அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு நாள் கூட சண்டை நடந்ததில்லை. ஆனால் இப்படி ஒரு முடிவை மாலதி எடுத்தது அதிர்ச்சியாக உள்ளது என்றனர். 

Next Story