பாபநாசம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு, 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்


பாபநாசம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு, 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்
x
தினத்தந்தி 22 Aug 2019 4:00 AM IST (Updated: 22 Aug 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

பாசனத்திற்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீரை கலெக்டர் ஷில்பா திறந்து வைத்தார். இதன் மூலம் 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான கால்வாய்களில் முன்குறுவை சாகுபடி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ந் தேதி பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் ஜூன் மாதம் தண்ணீர் திறக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. உடனே அந்த பகுதி விவசாயிகள் தாங்கள் நெற்பயிர் சாகுபடி செய்வதற்காக தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் பேரில் கலெக்டர் ஷில்பா நேற்று பாபநாசம் அணையில் இருந்து ஷட்டர் மூலம் தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது தண்ணீர் பூ போல விரிந்து பார்போரை கவரும் வண்ணம் விழுந்தது. இதைத்தொடர்ந்து கலெக்டர் ஆற்றில் பூ தூவினார். நேற்று அணையின் நீர்மட்டம் 109.40 அடியாக இருந்தது.

இதைத்தொடர்ந்து கலெக்டர் ஷில்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின் பேரின் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய், கன்னடியன் கால்வாய் மற்றும் கோடகன் கால்வாய் போன்ற கால்வாய்களுக்கு வருகிற 9-ந் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் மூலம் 24,090 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். அம்பை, சேரன்மாதேவி, நெல்லை, பாளையங்கோட்டை தாலுகாக்களில் உள்ள வாழை பயிர்கள், மக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு அதிக மகசூல் அடைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், ஞானதிரவியம், முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ., சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ், தாமிரபரணி வடிநில கோட்ட பொறியாளர் சொர்ணகுமார், உதவி செயற்பொறியாளர்கள் தங்கராஜ், பழனிவேல், உதவி பொறியாளர் மகேசுவரன், பொறியாளர்கள் வெங்கடாசலம், சீனிவாசன், பிச்சையா, சண்முகராஜன், அம்பை தாசில்தார் வெங்கடேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. சக்திவேல்முருகன், அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் செவல் முத்துசாமி, இளைஞர் அணி செயலாளர் அரிகர சிவசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story