ரத்தினகிரி அருகே, ரூ.21 லட்சம் எலக்ட்ரானிக் பொருட்களுடன் லாரி கடத்தல் 4 பேர் கைது
ரத்தினகிரி அருகே ரூ.21 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்களுடன் கன்டெய்னர் லாரியை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆற்காடு,
சென்னையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு சொந்தமான கன்டெய்னர் லாரியை தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த துரை (வயது 41) என்பவர் சென்னையில் இருந்து ரூ.21 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்களை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நோக்கி சென்றார்.
வேலூர் மாவட்டம், ரத்தினகிரியை அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஓட்டல் அருகே கன்டெய்னர் லாரியை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார். பின்னர் லாரியை எடுக்க முயன்ற போது அங்கு வந்த 5 வாலிபர்கள், துரையை தாக்கிவிட்டு, கத்தியை காட்டி மிரட்டி கன்டெய்னர் லாரியை கடத்தி சென்றனர்.
இதுகுறித்து துரை ரத்தினகிரி போலீசில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் உதவியுடன் வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர்.
பின்னர் அங்கிருந்து லாரி ரத்தினகிரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், வேலூர் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த யாசின், ராம்குமார் (22), அசோக்குமார் (29), வேலூர் முத்துமண்டபம் பகுதியை சேர்ந்த லோகேஷ் (21), விருதம்பட்டு பகுதியை சேர்ந்த அன்பழகன் (24) ஆகியோர் கன்டெய்னர் லாரியை கடத்தி சென்றது தெரியவந்தது.
இதில் யாசின் தவிர மற்ற 4 பேரையும் ரத்தினகிரி போலீசார் கைது செய்தனர். தப்பிச்சென்ற யாசின் தொரப்பாடியில் உள்ள வேளாண்மைத்துறையில் உதவியாளராக வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் லோகேசை பிடிப்பதற்காக போலீசார் துரத்தி சென்ற போது அவர் சுவர் ஏறி குதிக்க முயற்சித்துள்ளார். அப்போது கீழே விழுந்த அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னர் அவர் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது செய்யபட்டவர்களிடம் இருந்து 4 ஆட்டோக்கள், 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக ரத்தினகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story