அரக்கோணம் நகராட்சியில் சிறிய சந்துகளுக்குள்ளும் சென்று குப்பைகள் அள்ள 30 பேட்டரி வாகனங்கள்;பொதுமக்கள் வரவேற்பு


அரக்கோணம் நகராட்சியில் சிறிய சந்துகளுக்குள்ளும் சென்று குப்பைகள் அள்ள 30 பேட்டரி வாகனங்கள்;பொதுமக்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 22 Aug 2019 3:00 AM IST (Updated: 22 Aug 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் நகராட்சியில் சிறிய சந்துகளுக்குள்ளும் எளிதில் சென்று குப்பைகளை அகற்றுவதற்காக 30 பேட்டரி வாகனங்களை அரசு வழங்கியுள்ளது. இந்த வாகனங்கள் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

அரக்கோணம், 

வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் நகராட்சி 36 வார்டுகள் கொண்ட பெரிய நகராட்சி ஆகும். நகராட்சிக்குட்பட்ட தெருக்களில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள், குப்பைகளை அள்ள 113 நிரந்தர தொழிலாளர்கள், 195 தனியார் துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நகரில் சேரும் குப்பைகளை அகற்றுவது இவர்களுக்கு பெரிய சவாலாக உள்ளது. நகராட்சியில் இருந்து துப்புரவு வாகனங்கள் வந்தால்தான் குப்பைகளை முழுமையாக அகற்றி எடுத்துச் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு நகராட்சிகளில் குப்பைகளை எடுத்து செல்ல சிறிய அளவிலான பேட்டரி வாகனங்களை பயன்படுத்த நடவடிக்கை எடுத்தது. அதன்படி அரக்கோணம் நகராட்சிக்கு மொத்தம் 30 பேட்டரி வாகனங்களை வழங்கியது. முதற்கட்டமாக 30 பேட்டரிவாகனங்களை நகராட்சி நிர்வாகம் 23 வார்டுகளில் பயன்படுத்தி வருகிறது. படிப்படியாக மீதமுள்ள வார்டுகளில் பேட்டரி வாகனங்களை பயன்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த பேட்டரி வாகனங்கள் சிறிய, குறுகிய தெருக்கள், சந்துகளுக்குள்ளும் எளிதில் சென்று குப்பைகளை அகற்றி வருவது பொதுமக்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. சிறிய அளவிலான வண்டியாக இருப்பதால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் வாகனம் சென்று வருகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த வண்டியை பயன்படுத்த முடியும். தெருக்களில் பேட்டரி வண்டி செல்லும் போது எந்தவித சுற்றுப்புறமாசும் கிடையாது. சத்தமே வெளியில் கேட்காத வகையில் சென்று வருகிறது.

இந்த வாகனத்தை ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்களும் இயக்கி வருகின்றனர். பச்சை நிறத்தில் சட்டை, தலையில் தொப்பி, கையுறையுடன் நகரத்தை வலம் வரும் துப்புரவு தொழிலாளர்களால் தற்போது அரக்கோணம் நகரத்தில் தெருக்களில் குப்பைகள் தேங்குவதே கிடையாது. வண்டி வருவதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் விதமாக தொழிலாளர்கள் தெருக்களில் நுழையும் போது ஒவ்வொரு வீடு முன்பாக விசில் அடித்து பொதுமக்களிடம் பொறுமையாக நின்று வாங்கிச் செல்கின்றனர்.

இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “முதற்கட்டமாக 30 பேட்டரி வாகனங்கள், 3 சிறிய டெம்போக்கள், 2 லாரிகள் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. பேட்டரி வாகனங்களுக்கு பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பு இருப்பதால் நகராட்சிக்கு கூடுதல் பேட்டரி வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன் மூலம் நகர பகுதிகளில் துளி அளவு குப்பை கூட தெருவில் கிடக்காத வகையில் தூய்மையாக வைத்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

Next Story