ஸ்ரீமுஷ்ணத்தில், உதவி தலைமை ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் கைது - மேலும் ஒருவருக்கு வலைவீச்சு


ஸ்ரீமுஷ்ணத்தில், உதவி தலைமை ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் கைது - மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 22 Aug 2019 4:00 AM IST (Updated: 22 Aug 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீமுஷ்ணத்தில் உதவி தலைமை ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஸ்ரீமுஷ்ணம்,

ஸ்ரீமுஷ்ணம் வானகார தெருவில் வசித்து வந்தவர் கிருஷ்ணசாமி மகன் தமிழ்செல்வன். இவர் கொழை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தைக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதையடுத்து தமிழ்செல்வன் மருத்துவமனைக்கு சென்றிருந்த சமயத்தில், அவரது வீட்டின் பின்பக்க கதவு பூட்டை மர்ம மனிதர்கள் உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த 13 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்திற்கு சென்றனர். அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை விசாரணைக்காக போலீசார் அழைத்தனர். உடன் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் பிடிப்பட்டவர்களில் ஒருவர் அண்ணங்காரங்குப்பத்தை சேர்ந்த துரை மகன் தாஸ் என்கிற ரவிசாஸ்திரி(வயது 31), மற்றொருவர் மேலநெடுவாய் தெற்கு தெருவை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (42) என்பதும் தெரியவந்தது. இவர்கள் தமிழ்செல்வன் வீட்டின் கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து ரவிசாஸ்திரி, சிவசுப்பிரமணியன் ஆகியோரை கைது செய்து, 13 பவுன் நகையை போலீசார் மீட்டனர். இந்த வழக்கில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story