விநாயகர் சதுர்த்தி விழா, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம்


விநாயகர் சதுர்த்தி விழா, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 22 Aug 2019 4:15 AM IST (Updated: 22 Aug 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் நடந்தது.

விழுப்புரம்,

விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெறும். பின்னர் 3 மற்றும் 5-ம் நாள் வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக நீர்நிலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படும். ஆகவே சதுர்த்தி விழா முன்னேற்பாடு பாதுகாப்பு பணிகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. அந்த இடங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அனுமதி பெறாமல் வைக்கப்படும் சிலைகளை உடனுக்குடன் அகற்றவேண்டும். பள்ளிவாசல், தேவாலயம் வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லும் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும். மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் உட்கோட்டங்களில் இருந்து விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக நீர்நிலைகளுக்கு எப்போது கொண்டு செல்லப்படுகிறது என ஆய்வு செய்து, உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும். விநாயகர் சிலை வழிபாடு மற்றும் ஊர்வலத்தின்போது சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் வழிப்பறி, கொள்ளை, திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் 24 மணி நேரமும் ரோந்துப் பணிகளில் ஈடுபடவேண்டும். மது, சாராயம் கடத்தலை தடுக்க புதுச்சேரி எல்லைப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும். வழக்குகளில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண் ஜெயக்குமார் காவல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால், அஜய்தங்கம், ராமநாதன் உள்பட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story