திட்டக்குடி அருகே, சத்துணவில் மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் வினியோகம்


திட்டக்குடி அருகே, சத்துணவில் மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் வினியோகம்
x
தினத்தந்தி 21 Aug 2019 11:30 PM GMT (Updated: 21 Aug 2019 9:03 PM GMT)

திட்டக்குடி அருகே சத்துணவில் மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டது. இதனால் பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திட்டக்குடி,

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் முட்டைகள் சில இடங்களில் அழுகிய நிலையில் இருப்பதாக சமீப காலமாக புகார்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அழுகிய முட்டைகள் வழங்கிய சம்பவம் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து மாவட்டத்தில் மீண்டும் ஒரு பள்ளியில் இதுபோன்று அழுகிய முட்டை வினியோகம் செய்த சம்பவம் வெடித்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

திட்டக்குடி அடுத்துள்ள மேல்ஆதனூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 76 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு நேற்று வழக்கம் போல் மதியம் சத்துணவு வழங்கப்பட் டது. அப்போது அவர்களுக்கு முட்டையும் வழங்கப்பட்டது. இதை மாணவர்கள் தங்களது வீட்டுக்கு எடுத்து சென்றுள்ளனர். அப்போது முட்டையை உடைத்து பார்த்த போது அழுகிய நிலையில் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர் அனைவரும் அழுகிய முட்டைகளுடன் பள்ளிக்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இதுபற்றி பள்ளி ஆசிரியர் ராதாபாயிடம் முறையிட்டனர். தொடர்ந்து தகவல் அறிந்த திட்டக்குடி தாசில்தார் புகழேந்தி பள்ளிக்கு விரைந்து வந்து, அங்கிருந்த ஆசிரியர்களிடம் விசாரித்தார். பின்னர் மாணவர்களுக்கு தரமான முட்டைகள் மட்டுமே வினியோகம் செய்யப்பட வேண்டும். எனவே ஆசிரியர்கள் முட்டைகள் தரமானதாக உள்ளனவா என்று பரிசோதித்திட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கிய அழுகிய முட்டைகள் அனைத்தையும் சேகரித்த ஆசிரியர்கள், அவற்றை அழித்தனர். தாசில்தார் புகழேந்தியுடன் வருவாய் ஆய்வாளர் குமரன், கிராம நிர்வாக அலுவலர் முத்துவேல் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் அழுகிய முட்டைகள் வழங்கும் சம்பவம் நாளுக்கு நாள் நடந்து வருகிறது. எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அரசு துரிதமான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story