திருவட்டார் அருகே பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; மாணவர் பலி


திருவட்டார் அருகே பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; மாணவர் பலி
x
தினத்தந்தி 22 Aug 2019 4:15 AM IST (Updated: 22 Aug 2019 2:45 AM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே பஸ்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாணவர் பரிதாபமாக இறந்தார்.

திருவட்டார்,

அருமனை அருகே குழிச்சல் பகுதியை சேர்ந்தவர் ஜின்டோஸ், ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவருக்கு மனைவியும், விஷ்ணுகுமார் (வயது 19) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். விஷ்ணுகுமார் திருவட்டார் அருகே குமரங்குடி பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவர் தினமும் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று காலை விஷ்ணுகுமார் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். தேமானூர் அருகே கல்வெட்டான்குழி பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற ஒரு கல்லூரி பஸ்சை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

பலி

இதில் தூக்கி வீசப்பட்ட விஷ்ணுகுமார் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விஷ்ணுகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story