கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம்: கடைசி நேரத்தில் 6 பேரின் பெயர்கள் நீக்கம் பா.ஜனதா மேலிடத்தின் முடிவால் மவுனமாகிவிட்ட எடியூரப்பா
கர்நாடக மந்திரிசபை விரிவாக்கத்தின்போது, கடைசி நேரத்தில் 6 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், பா.ஜனதா மேலிடத்தின் இந்த முடிவால் எடியூரப்பா மவுனமாகிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மந்திரிசபை விரிவாக்கத்தின்போது, கடைசி நேரத்தில் 6 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், பா.ஜனதா மேலிடத்தின் இந்த முடிவால் எடியூரப்பா மவுனமாகிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடும் அதிருப்தி
கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. கர்நாடக மந்திரிசபை நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டது. 17 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். இதில் எடியூரப்பாவுக்கு நெருக்கமான சிலருக்கு மந்திரி பதவி கிடைப்பது உறுதி என்று நம்பியவர்களின் பெயர்கள், பட்டியலில் இடம் பெறவில்லை. இதனால் மந்திரி பதவி கிடைக்காமல் அவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
எடியூரப்பா தனது ஆதரவாளர்களின் பெயர்களை பட்டியலில் சேர்த்து பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவிடம் வழங்கினார். ஆனால் அமித்ஷா அந்த பட்டியலுக்கு முழுமையாக ஒப்புதல் வழங்கவில்லை. கர்நாடகத்தை சேர்ந்த பா.ஜனதா தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோசிடம் இருந்து இன்னொரு பெயர் பட்டியலை அமித்ஷா பெற்றார்.
6 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன
அதற்கு சிறிய மாற்றத்துடன் அமித்ஷா ஒப்புதல் வழங்கினார். ஆனால் கடைசி நேரத்தில் அதாவது பதவி ஏற்பு விழாவுக்கு சில மணி நேரத்திற்கு முன்பு எடியூரப்பா வழங்கிய பட்டியலில் உமேஷ்கட்டி, ரேணுகாச்சார்யா, முருகேஷ் நிரானி, சி.பி.யோகேஸ்வர், கே.ஜி.போப்பையா, பசனகவுடா பட்டீல் யத்னால் ஆகிய 6 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. பசவராஜ் பொம்மையின் பெயர் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜனதா மேலிடத்தின் இந்த முடிவால் எடியூரப்பா ஒன்றும் பேசாமல் மவுனமாகிவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான உமேஷ்கட்டி, “பதவி ஏற்பு விழா நடைபெற்ற தினத்தன்று காலை 6 மணிக்கு புதிய மந்திரிகளின் பட்டியலில் எனது பெயர் இடம் பெற்று இருந்தது. அடுத்த 10 நிமிடத்தில் எனது பெயர் நீக்கப்பட்டுவிட்டதாக தகவல் வந்தது. இது ஏன் நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை. இந்த நிகழ்வு எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது“ என்றார்.
Related Tags :
Next Story