சரத்பவாருக்கு நெருக்கமான உதயன்ராஜே எம்.பி. பா.ஜனதாவில் சேருகிறார்? முதல்-மந்திரியுடன் சந்திப்பால் பரபரப்பு


சரத்பவாருக்கு நெருக்கமான உதயன்ராஜே எம்.பி. பா.ஜனதாவில் சேருகிறார்? முதல்-மந்திரியுடன் சந்திப்பால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Aug 2019 5:00 AM IST (Updated: 22 Aug 2019 4:06 AM IST)
t-max-icont-min-icon

உதயன் ராஜே எம்.பி. முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்து பேசினார். அவர் பா.ஜனதாவில் சேர இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மும்பை, 

உதயன் ராஜே எம்.பி. முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்து பேசினார். அவர் பா.ஜனதாவில் சேர இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

முதல்-மந்திரியுடன் சந்திப்பு

மராட்டிய சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பலர் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசில் இருந்து விலகி சிவசேனா, பா.ஜனதாவில் சேர்ந்து வருகின்றனர். மேலும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சகன்புஜ்பால் சிவசேனாவிலும், புனே பகுதி காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவர்தன் பாட்டீல் பா.ஜனதாவிலும் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த பரபரப்புக்கு மத்தியில் சரத்பவாருக்கு மிகவும் நெருக்கமான சத்தாரா தொகுதி எம்.பி. உதயன்ராஜே போஸ்லே பா.ஜனதாவில் இணைய உள்ளதாக பரவிவரும் தகவல்கள் தேசியவாத காங்கிரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர் நேற்று முன்தினம் இரவு மும்பையில் முதல்-மந்திரி தேவேந்திரபட்னாவிசை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து அவர் கூறும்போது, “சத்தாரா பகுதியில் மேற்கொள்ள வேண்டிய வெள்ள நிவாரணப்பணிகள் தொடர்பாகவே முதல்-மந்திரியை சந்தித்து பேசினேன்”என்றார்.

அஜித்பவார் பதில்

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவாரிடம் கேட்டபோது, “சத்தாரா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து பேசவே உதயன்ராஜே போஸ்லே எம்.பி. முதல்-மந்திரியை சந்தித்து உள்ளார். இது அரசியல் சந்திப்பு அல்ல“ என்றார்.

உதயன்ராஜே போஸ்லே எம்.பி.யின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று நிருபர்கள் கேட்டபோது, அதை அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று அஜித்பவார் பதிலளித்து விட்டார்.

Next Story