சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் சிறுமியின் உடலை பெறாமல் தப்பி ஓடிய தம்பதி போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
உப்பள்ளியில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் சிறுமியின் உடலை பெறாமல் ஆஸ்பத்திரியிலேயே விட்டுவிட்டு ஒரு தம்பதி தப்பி ஓடிவிட்டனர்.
உப்பள்ளி,
உப்பள்ளியில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் சிறுமியின் உடலை பெறாமல் ஆஸ்பத்திரியிலேயே விட்டுவிட்டு ஒரு தம்பதி தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிறுமியுடன் வந்த தம்பதி
தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே உள்ள கோகுலா கிராமத்தைச் சேர்ந்தவர் தாதாபீர் சேக். இவருடைய மனைவி பூஜா தாகூர். இத்தம்பதி நேற்று முன்தினம் 4 வயது சிறுமியுடன் உப்பள்ளி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அந்த சிறுமி தங்களுடைய மகள் என்றும், தற்போது அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் கூறி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சிறுமியின் உடல்நிலை மோசமாக இருந்ததை தொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிறுமியை அனுமதித்தனர்.
அங்கு அந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நள்ளிரவில் அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள். இதையடுத்து டாக்டர்கள் தாதாபீரையும், அவருடைய மனைவி பூஜா தாகூரையும் அழைத்து பிரேத பரிசோதனை முடிந்தவுடன் குழந்தையின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.
தப்பி ஓட்டம்
பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து சிறுமியின் உடலை ஒப்படைப்பதற்காக தாதாபீரையும், பூஜா தாகூரையும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் தேடினர். அப்போது அவர்கள் 2 பேரும் ஆஸ்பத்திரியில் இருந்து மாயமாகி விட்டது தெரியவந்தது. அதாவது சிறுமியின் உடலை பெறாமல் ஆஸ்பத்திரியிலேயே விட்டுவிட்டு அவர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டது ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் இதுபற்றி உப்பள்ளி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ஆஸ்பத்திரியில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது தாதாபீரும், அவருடைய மனைவி பூஜா தாகூரும் ஆஸ்பத்திரிக்குள் சிறுமியுடன் வரும் காட்சி அதில் பதிவாகி இருந்தது. அதை கைப்பற்றி அதன்மூலம் அவர்கள் 2 பேரையும் தேடி கோகுலா கிராமத்திற்கு போலீசார் சென்றனர்.
போலீஸ் வலைவீச்சு
அப்போது அங்கு தாதாபீரின் வீடு பூட்டிக் கிடந்தது. இதையடுத்து போலீசார் அக்கம்பக்கத்தில் விசாரித்தனர். அப்போது போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதாவது தாதாபீரும், அவருடைய மனைவி பூஜா தாகூரும் இரவோடு, இரவாக வீட்டை காலி செய்துவிட்டு வெளியூருக்கு சென்றுவிட்டது போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பதை அக்கம்பக்கத்தினர் யாரிடமும் தெரிவிக்காமல் சென்றுவிட்டதும் போலீசாருக்கு தெரிந்தது. இதற்கிடையே தாதாபீரின் மேல் ஏராளமான திருட்டு வழக்குகள் இருப்பதும், அவருடைய பெயர் போலீசாரின் ரவுடி பட்டியலில் இடம்பெற்று இருப்பதும் போலீசாருக்கு தெரிந்தது.
இதனால் தாதாபீர் மற்றும் அவருடைய மனைவி பூஜா தாகூரின் நடவடிக்கையில் போலீசாருக்கு கடுமையான சந்தேகம் எழுந்துள்ளது. அவர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தது அவர்களுடைய மகள் தானா?, அல்லது அது கடத்தி வரப்பட்ட சிறுமியா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் தலைமறைவான அவர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story