ஒரு கையை சங்கிலியால் கட்டியபடி கடலில் 7½ கி.மீ.தூரம் நீந்தி சாதனை படைத்த நாகை மாணவர்


ஒரு கையை சங்கிலியால் கட்டியபடி கடலில் 7½ கி.மீ.தூரம் நீந்தி சாதனை படைத்த நாகை மாணவர்
x
தினத்தந்தி 23 Aug 2019 4:30 AM IST (Updated: 23 Aug 2019 12:06 AM IST)
t-max-icont-min-icon

ஒரு கையை சங்கிலியால் கட்டியபடி கடலில் 7½ கிலோ மீட்டர் தூரம் நீந்தி நாகை மாணவர் சாதனை படைத்துள்ளார்.

வேளாங்கண்ணி,

நாகையை அடுத்த கீச்சாங்குப்பத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மகன் சபரிநாதன் (வயது 23). இவர், நாகையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். சபரிநாதனுக்கு சிறு வயதில் இருந்தே நீச்சல் மீது மிகுந்த ஆர்வம் இருந்து வந்தது. இதனால் அவர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு ஏராளமான பதக்கங்களையும், பாராட்டுக்களையும் பெற்று வந்தார்.

இந்த நிலையில் வேளாங்கண்ணியில் இருந்து நாகை அக்கரைப்பேட்டை வரை ஒரு கையில் சங்கிலியை கட்டிக்கொண்டு நீந்தி சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வம் நீண்ட நாட்களாகவே சபரிநாதனுக்கு இருந்து வந்தது. இதனையடுத்து அந்த சாதனையை நிகழ்த்துவதற்காக மாணவர் சபரிநாதன் நேற்று வேளாங்கண்ணி கடற்கரைக்கு வந்தார். அங்கு அவரை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேலு வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

கையை சங்கிலியால் கட்டியபடி...

இதனைத்தொடர்ந்து சபரிநாதன் தனது இடது கையை 1 கிலோ எடையுள்ள சங்கிலியால் இடுப்பில் கட்டி கொண்டு ஒரு கையாலேயே கடலில் நீந்த தொடங்கினார். தொடர்ந்து அவரது பயிற்சியாளர்களும், உறவினர்களும் 3 பைபர் படகுகளில் அவரை பின்தொடர்ந்து சென்றனர். வேளாங்கண்ணி கடலில் இருந்து காலை 8.04 மணிக்கு கடலில் நீந்த தொடங்கிய சபரிநாதன், 11.35 மணிக்கு அக்கரைப்பேட்டையை சென்றடைந்தார். இவர் கடலில் 7½ கிலோ மீட்டர் தூரத்தை 3 மணி நேரம் 31 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.

உற்சாகப்படுத்திய கலெக்டர்

இதனிடையே மாணவரின் சாதனையை பார்ப்பதற்காக மாவட்ட கலெக்டர் சுரேஷ் குமார் அக்கரைப்பேட்டைக்கு வந்தார். தொடர்ந்து கடலில் எதிர்நீச்சல்போட்டு கொண்டு எல்லையை நோக்கி விரைந்து வந்த சபரிநானை உற்சாகப்படுத்தினார். இதையடுத்து கடலில் நீந்தி கரையை வந்தடைந்த சபரிநாதனை ஊர் பொதுமக்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கட்டித்தழுவியதுடன் அவரை தூக்கி கொண்டாடினர். இதனையடுத்து சபரிநாதனின் சாதனையை “வில் மெடல் ரெக்கார்ட்ஸ்“ என்ற அமைப்பு அங்கீகரித்து சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கியது. தொடர்ந்து சபரிநாதனுக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

கடந்த 2017-ம் ஆண்டு சபரிநாதன், நாகூர் கடலில் இருந்து தனது கை, கால்களை கட்டிக்கொண்டு 5 கி.மீ. தூரம் வரை நீந்தி சென்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story