பெரம்பலூரில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன


பெரம்பலூரில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 23 Aug 2019 4:15 AM IST (Updated: 23 Aug 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர்- பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் நடந்த முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

பெரம்பலூர்,

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் அடிப்படை தேவைகளான குடிநீர், சுகாதாரம், சாலை வசதி, தெருவிளக்குகள் போன்ற கோரிக்கை குறித்து மனுக்கள் அளிக்க தமிழக முதல்- அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் முகாம் நேற்று தொடங்கியது. வருகிற 31-ந் தேதிக்குள் அனைத்து பகுதிகளிலும் மனுக்கள் பெறப்படவுள்ளது. அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட கோ.சி.நகர் வார்டு எண்.10-ல் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் சார்பில் நடந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் முன்னிலையில் பெற்றுக்கொண்டார். ஜெயங்கொண்டம் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். துப்புரவு பணியாளரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் பேசுகையில், வருகிற 31-ந் தேதி வரை அரியலூர் மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களில், மனுக்கள் பெற அலுவலர்கள் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் குறைகள் அடங்கிய கோரிக்கை மனுக்களை நேரில் அளித்து பயன்பெறலாம் என்றார். இதில் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், நகராட்சி ஆணையர் திருநாவுகரசு, தாசில்தார் கதிரவன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூரில்...

இதேபோல் பெரம்பலூர் தாலுகா குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையத்தில் நடந்த முகாமிற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, பெரம்பலூர் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலையில் முகாமை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை வாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சக்திவேல், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கங்காதேவி பெரம்பலூர் தாசில்தார் பாரதிவளவன், குரும்பலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் ஆகிய தாலுகாக்களிலும் முகாம் நடைபெற்றது. பாளையத்தில் நடந்த முகாமில் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. வருவதற்கு சற்று தாமதம் ஏற்பட்டதால் கலெக்டர் சாந்தா சிறிது நேரம் மக்களோடு மக்களாக இருந்து காத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story