உருக்காலையை தனியார் மயமாக்குவதை கண்டித்து சேலத்தில் தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதம்


உருக்காலையை தனியார் மயமாக்குவதை கண்டித்து சேலத்தில் தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 23 Aug 2019 4:30 AM IST (Updated: 23 Aug 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

உருக்காலையை தனியார் மயமாக்குவதை கண்டித்து சேலத்தில் தொழிற்சங்கத்தினர் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

சேலம்,

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதை கண்டித்து உருக்காலை தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உருக்காலையை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும், உலகளாவிய டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் வடமலை, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் உதயகுமார், தொ.மு.ச. சேலம் மாவட்ட கவுன்சில் செயலாளர் பழனியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் அகில இந்திய தொ.மு.ச. பேரவை மாநில பொருளாளர் நடராஜன், சி.ஐ.டி.யு. மாநில பொதுச்செயலாளர் சுகுமாறன், சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் அ.ம.மு.க. அமைப்பு செயலாளர் எஸ்.கே.செல்வம் உள்பட தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த போராட்டத்தில் உருக்காலை தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். மேலும் அவர்கள் ‘மத்திய அரசே உருக்காலையை தனியார்மயமாக்கும் கொள்கையை கைவிடு, மத்திய அரசே உலக டெண்டரை கைவிடு என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய வாசக அட்டைகளை கையில் வைத்திருந்தனர்.

இதுகுறித்து அகில இந்திய தொ.மு.ச. பேரவை மாநில பொருளாளர் நடராஜன் நிருபர்களிடம் கூறும் போது, ‘சேலம் உருக்காலையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். ஆனால் உருக்காலை நஷ்டத்தில் இயங்குவதாக கூறி அதை மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறது. தனியார் மயமாக்குவதை கைவிடவில்லை என்றால் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி மிக பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்“என்றார்.

Next Story