லஞ்சம் பெற உடந்தை : அங்கன்வாடி ஊழியர்கள் 2 பேருக்கு ஒரு ஆண்டு சிறை-கோர்ட்டு தீர்ப்பு


லஞ்சம் பெற உடந்தை : அங்கன்வாடி ஊழியர்கள் 2 பேருக்கு ஒரு ஆண்டு சிறை-கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 23 Aug 2019 3:45 AM IST (Updated: 23 Aug 2019 2:02 AM IST)
t-max-icont-min-icon

லஞ்சம் பெற உடந்தையாக இருந்த அங்கன்வாடி ஊழியர்கள் 2 பேருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பகுதியில் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் அலுவலராக கடந்த 2009-ம் ஆண்டு பணிபுரிந்தவர் பிரேமா. அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வந்தபோது அதை வழங்க இவர் ஒவ்வொருவரிடமும் தலா ரூ.150 முதல் ரூ.200 வரை லஞ்சமாக வசூலித்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.22 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பான விசாரணையில் அங்கன்வாடி ஊழியர்களான சந்திரகுமாரி, தேன்மொழி ஆகியோர் இடைத்தரகர்களாக செயல்பட்டு லஞ்ச பணம் கைமாற உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக மேற்கண்ட 3 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தர்மபுரி தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பிரேமா இறந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில் சந்திரகுமாரி, தேன்மொழி ஆகியோருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு ராஜ்குமார் தீர்ப்பளித்தார்.

Next Story