கடலையூரில் தியாகிகள் நினைவு தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை


கடலையூரில் தியாகிகள் நினைவு தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 22 Aug 2019 10:00 PM GMT (Updated: 22 Aug 2019 8:35 PM GMT)

கடலையூரில் தியாகிகள் நினைவு தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கோவில்பட்டி,

கடந்த 22-8-1942 அன்று கோவில்பட்டி அருகே கடலையூரில் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தில் ஆங்கிலேய அரசு நடத்திய துப்பாக்கி சூட்டில் சங்கரலிங்க முதலியார் வீரமரணம் அடைந்தார். மேலும் மாடசாமி முதலியார், ராமசாமி முதலியார் உள்ளிட்டவர்கள் துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்தனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் 34 பேரை பல்வேறு சிறைகளில் ஆங்கிலேய அரசு அடைத்தது.

இதன் 77-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கடலையூர் செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி முன்புள்ள தியாகிகள் நினைவு தூணுக்கு கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், சின்னப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில், செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள், முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். பின்னர் அவர்கள், தியாகிகள் நினைவு தூணுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். ‘தேசப்பற்று, தேசபக்தியை வளர்ப்போம்‘ என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

எட்டயபுரம் தாசில்தார் அழகர், தியாகிகள் நினைவு அறக்கட்டளை பொறுப்பாளர் ராமலிங்கம், பள்ளி செயலாளர் அய்யனார், தலைமை ஆசிரியர் விவேகானந்தன், ரோட்டரி சங்க தலைவர் பரமேசுவரன், நிர்வாகிகள் முத்து முருகன், முத்து செல்வம், நடராஜன், வீராசாமி, பிரபாகரன், கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story