நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் குழந்தை பெற்ற பெண்
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
நெல்லை,
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தெப்பக்குளத்தெருவை சேர்ந்தவர் சுடலை. இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது 28). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மாரியம்மாள் 2-வது முறையாக கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாரியம்மாள், நெல்லை மாவட்டம் கடையத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று பிரசவம் பார்க்க முடிவு செய்தார். இதற்காக அவர் நேற்று திருச்செந்தூர்-நெல்லை பாசஞ்சர் ரெயிலில் ஏறி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து கடையத்துக்கு செல்வதற்காக 4-வது பிளாட்பாரத்தில் புறப்பட தயார் நிலையில் நின்றிருந்த நெல்லை-செங்கோட்டை பாசஞ்சர் ரெயிலில் ஏறினார்.
ரெயில் பெட்டிக்குள் ஏறி இருக்கையில் அமர்ந்து இருந்த மாரியம்மாளுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் கதறி துடித்த மாரியம்மாளை சக பயணிகள் அருகில் இருந்து உதவி செய்தனர். பின்னர் இதுகுறித்து ரெயில் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால், சப்-இன்ஸ்பெக்டர் ஜூடித், மகளிர் போலீஸ் ஏட்டு ராதா, விஜயசாந்தி மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர், மருத்துவ உதவி குழுவினர் 4-வது பிளாட்பாரத்துக்கு விரைந்து சென்றனர். அதே நேரத்தில் மாரியம்மாளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்ல 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆகியோர் மாரியம்மாளை அழைத்துச் செல்ல பிளாட்பாரத்துக்கு வந்தனர். ஆனால் மாரியம்மாளை அங்கிருந்து அழைத்துச்செல்ல முடியவில்லை. அவருக்கு பிரசவ வலி அதிகமானதை தொடர்ந்து அங்கேயே பிரசவம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவ குழுவினர் மாரியம்மாளுக்கு அங்கேயே பிரசவம் பார்த்தனர். அப்போது அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. உடனடியாக முதல்-உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தாய், சேய் இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story