குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x
தினத்தந்தி 22 Aug 2019 9:30 PM GMT (Updated: 22 Aug 2019 8:38 PM GMT)

குற்றாலம் அருவிகளில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

தென்காசி, 

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த காலக்கட்டத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதில் குளிப்பதற்காக மாவட்டம் முழுவதும் இருந்து மட்டும் இல்லாமல் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இந்த ஆண்டு குற்றாலத்தில் கடந்த ஜூன் மாதம் 10-ந் தேதி சீசன் தொடங்கியது. சீசன் தொடங்கிய 2 நாட்கள் மட்டுமே நன்றாக இருந்தது. பின்னர் சாரல் மழை இல்லாமல் அருவிகளில் நீர்வரத்து குறைந்தது. இதனால் குற்றாலத்தில் சீசன் டல் அடித்தது. தொடர்ந்து மழை இல்லாததால் ஜூன், ஜூலை மாதங்களில் சீசன் மந்தமாகவே இருந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று காலையில் இருந்தே குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. வெயிலே இல்லை. குளிர்ந்த காற்று வீசியது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 2 மணி அளவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஐந்தருவியில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் குளிப்பது ஆபத்து என்பதால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தனர்.

மாலை 5 மணி அளவில் மெயின் அருவி, பழையகுற்றாலம் அருவி, புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தண்ணீர் பழுப்பு நிறத்தில் விழுந்தது. மெயின் அருவியில் ஆர்ச் தெரியாத அளவுக்கு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இந்த அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை பார்த்துச் சென்றனர். அருவிகளில் நீர்வரத்து குறைந்த பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story