திருவண்ணாமலையில், தனியார் வங்கியில் ரூ.1 கோடி நகைகள் மோசடி - 3 பெண்கள் உள்பட 7 அதிகாரிகள் கைது


திருவண்ணாமலையில், தனியார் வங்கியில் ரூ.1 கோடி நகைகள் மோசடி - 3 பெண்கள் உள்பட 7 அதிகாரிகள் கைது
x
தினத்தந்தி 22 Aug 2019 10:45 PM GMT (Updated: 22 Aug 2019 8:39 PM GMT)

திருவண்ணாமலையில் தனியார் வங்கியில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகளை மோசடி செய்ததாக 3 பெண்கள் உள்பட 7 வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை சன்னதி தெருவில் தனியார் வங்கி உள்ளது. இந்த வங்கியில் முதுநிலை மேலாளராக சுரேஷ், நகைக்கடன் மற்றும் பாதுகாப்பு பெட்டக அறையின் பொறுப்பாளராக சந்தானஹரிவிக்னேஷ், வங்கி செயல் மேலாளர் மற்றும் பாதுகாப்பு பெட்டக அறையின் பொறுப்பாளராக லாவண்யா, உதவி மேலாளர்களாக தேன்மொழி, இசைவாணி, நகை மதிப்பீட்டாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் கார்த்திகேயன், மணிகண்டன் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.

இந்த வங்கியில் நகைக்கடன் பெற வருபவர்களின் நகையை நகை மதிப்பீட்டாளர்கள் தரம் பார்த்து, மதிப்பீடு செய்து சந்தான ஹரிவிக்னேஷ் மற்றும் லாவண்யா ஆகியோரிடம் கொடுக்க வேண்டும். பின்னர் அவர்கள் வாடிக்கையாளர்களிடம் நகைக்கடன் விண்ணப்பம் பூர்த்தி செய்தும், அதனைச் சார்ந்த ஆவணங்களை பெற்றும் வாடிக்கையாளர்களிடம் கையொப்பம் பெற்று கடன் வழங்கிவிட்டு அந்த நகைகளை நகை பையில் வைத்து பாதுகாப்பு பெட்டக அறையின் பொறுப்பு அதிகாரிகளான சந்தானஹரிவிக்னேஷ் மற்றும் லாவண்யா ஆகியோர் சேர்ந்து பெட்டக அறைக்குள் எடுத்துச் சென்று பத்திரமாக வைப்பார்கள். இந்த வங்கியில் தனிநபருக்கு நகைக்கடன் வழங்கும்போது அதிகபட்சமாக ரூ.25 லட்சம் மட்டுமே வழங்க வேண்டும்.

ஆனால் திருவண்ணாமலையை சேர்ந்த பெண் ஒருவருக்கு பல நகைக்கடன்களாக ரூ.28 லட்சத்து 70 ஆயிரத்திற்கு விதிமுறைகளுக்கு முரணாக கடன் வழங்கி உள்ளதும், கடந்த மே மாதம் 18-ந் தேதி இந்த பெண்ணின் ஒரு நகைக்கடனை முடித்து விட்டு அந்த பெண்ணிடம் பணிபுரியும் ஒருவருக்கு ஒரு புதிய நகைக்கடனை ரூ.4 லட்சத்து 9 ஆயிரத்துக்கு தொடங்கியுள்ளதும் வங்கி உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

மேலும் சில நாட்களில் இந்த கடனை கார்த்திகேயன், மணிகண்டன் மற்றும் சந்தானஹரிவிக்னேஷ் ஆகியோர் சேர்ந்து செலுத்தி போலி கையெழுத்து போட்டு கடன் கணக்கை முடித்து வைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மே மாத இறுதியில் கோட்ட அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரியும் மணிவண்ணன் என்பவர் திருவண்ணாமலை கிளை வங்கியில் ஆய்வு செய்தார். அப்போது பெட்டக அறையில் 20 தங்க நகை பைகள் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. அதன் மொத்த எடை சுமார் 3 கிலோ 710 கிராம் ஆகும். அதன் மொத்தம் மதிப்பு சுமார் ரூ.1 கோடியே 16 லட்சம் ஆகும்.

தொடர்ந்து நகை பைகள் எவ்வாறு மாயமானது என்று உண்மை விவரத்தினை தெரிந்து கொள்ள கண்காணிப்பு கேமராவினை ஆய்வு செய்த பொழுது அதில் பதியப்பட்ட பதிவுகள் அழிக்கப்பட்டு இருந்தது. மேலும் கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை கண்காணிப்பு கேமரா நிறுத்தப்பட்டு இருந்தது.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விழுப்புரம் கோட்டத்தின் முதன்மை மேலாளர் முரளி என்பவர் புகார் மனு அளித்து உள்ளார்.

போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்- இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முதுநிலை மேலாளர் சுரேஷ், நகைக்கடன் அதிகாரி சந்தானஹரிவிக்னேஷ், வங்கி செயல் மேலாளர் லாவண்யா, உதவி மேலாளர்கள் தேன்மொழி, இசைவாணி, நகை மதிப்பீட்டாளர்கள் கார்த்திகேயன், மணிகண்டன் ஆகிய 7 பேரும் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story