பழனி நகராட்சி குப்பைக்கிடங்குக்கு தீவைப்பு: புகைமூட்டத்தால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல்


பழனி நகராட்சி குப்பைக்கிடங்குக்கு தீவைப்பு: புகைமூட்டத்தால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல்
x
தினத்தந்தி 22 Aug 2019 10:00 PM GMT (Updated: 22 Aug 2019 8:39 PM GMT)

பழனி நகராட்சி குப்பைக் கிடங்கில் நேற்று மர்ம நபர்கள் தீவைத்து சென்றனர். இதனால் ஏற்பட்ட புகைமூட்டம் சத்யாநகர் பகுதி முழுவதும் பரவியதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

பழனி, 

பழனி நகராட்சி 33 வார்டுகளை கொண்டது. இங்கு சுமார் 70 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். அதோடு புகழ்பெற்ற 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் அமைந்துள்ளதால் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகின்றனர். மேலும் ஆயக்குடி, நெய்க் காரப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் வேலை, கல்வி மற்றும் பிற தேவைகளுக்காக தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பழனி நகர் பகுதியில் சேகரமாகும் குப்பைகள் துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது. அந்தவகையில் நாளொன்றுக்கு சுமார் 1 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இவை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு, வேன், லாரிகளில் ஏற்றி சத்யாநகர் அருகே உள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே மர்ம நபர்கள் நகராட்சி குப்பைக்கிடங்குக்கு தீவைத்துவிட்டு செல்கின்றனர். இதனால் உருவாகும் புகைமூட்டம் சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிக்கு பரவுகிறது. அந்தவகையில் நேற்றும் குப்பைக்கிடங்குக்கு தீ வைக்கப்பட்டதால், கடும் புகைமூட்டம் உருவானது. இதனால் சத்யாநகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் மூச்சுவிட முடியாமல் அவதிக்கு உள்ளாகினர். மேலும் அருகிலுள்ள காய்கறி சந்தைக்கு வந்த விவசாயிகள், வியாபாரிகள் புகைமூட்டதால் கடும் பாதிப்படைந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மர்ம நபர்கள் இரவு வேளையில் குப்பைக்கிடங்குக்கு தீவைத்து விட்டு செல்வது வழக்கமான நிகழ்வாக உள்ளது. அவ்வாறு வைக்கப்படும் தீயினால் எழும் புகைமூட்டம் குடியிருப்பு பகுதிக்கு வருகிறது. இதனால் குழந்தைகள், முதியோர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே குப்பைகளுக்கு தீ வைக்கும் நபர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story