ஊசூர் அருகே சாலையை சீரமைக்கக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
ஊசூர் அருகே சாலையை சீரமைக்கக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடுக்கம்பாறை,
வேலூரை அடுத்த ஊசூரில் இருந்து சிவநாதபுரம் செல்லும் சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்த சாலை தற்போது குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.
இந்த சாலை வழியாக குருமலை, வெள்ளக்கல், நச்சுமேடு பகுதிகளை சேர்ந்தவர்கள் பயணம் செய்கின்றனர். சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை சிவநாதபுரத்தில் அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் அரியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் கூறுகையில், பல மாதங்களாக சாலை சேதமடைந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதனை சீரமைக்கக்கோரி பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story