ஆவின் பால் விற்பனை கமிஷன் தொகையை உயர்த்தி தர வேண்டும் - பொதுமேலாளரிடம், முகவர்கள் நலச்சங்கத்தினர் மனு


ஆவின் பால் விற்பனை கமிஷன் தொகையை உயர்த்தி தர வேண்டும் - பொதுமேலாளரிடம், முகவர்கள் நலச்சங்கத்தினர் மனு
x
தினத்தந்தி 23 Aug 2019 3:30 AM IST (Updated: 23 Aug 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

ஆவின் பால் விற்பனை கமிஷன் தொகையை உயர்த்தி தர வேண்டும் என்று பால் முகவர்கள் ஆவின் பொதுமேலாளரிடம் மனு அளித்தனர்.

வேலூர்,

வேலூர், திருவண்ணாமலை மாவட்ட ஆவின் பால் முகவர்கள் நலச்சங்கத்தினர் நேற்று ஆவின் பொதுமேலாளர் கணேசாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் கடந்த 19-ந் தேதி ஆவின் பால் விலை உயர்வு அமலுக்கு வந்தது. அதன்படி வேலூர் மாவட்டத்திலும் ஆவின் பால் விலை அமலுக்கு வந்துள்ளது. வேலூர் மாவட்டம் முழுவதும் 357 ஆவின் பால் விற்பனை முகவர்கள் உள்ளனர். தற்போது பால் விற்பனை கமிஷன் ஒரு லிட்டருக்கு ரூ.1.20 வழங்கப்பட்டு வருகிறது. பால் விலை உயர்வு காரணமாக கமிஷன் விலையையும் உயர்த்தி தர வேண்டும். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பால் முகவர்களுக்கான பால் விற்பனை கமிஷன் உயர்த்தப்படவில்லை.

கடை வாடகை, பணியாளர்கள் சம்பளம், மின்கட்டணம், வாகன எரிபொருள் உள்ளிட்ட அனைத்து செலவினங்களும் பலமடங்கு உயர்ந்து விட்டது. ஆனால் தற்போதும் ஆவின் நிறுவனம் பால் விற்பனை கமிஷன் விலையை உயர்த்தவில்லை. எனவே ஆவின் நிறுவனம் பால் விற்பனை கமிஷனை 10 சதவீதம் உயர்த்தி தர வேண்டும். அதாவது லிட்டருக்கு ரூ.4 கமிஷன் வழங்க வேண்டும்.

மேலும் மழைகாலம் தொடங்க உள்ளதால் பால் முகவர்கள் வீடுகள் மற்றும் வணிகர்களுக்கு வினியோகம் செய்வதால் நிறுவனத்தின் சார்பில் விலையில்லா மழை ஆடை (ரெயின் கோட்) வழங்க வேண்டும். மழைகாலத்தில் அதிகாலையில் பால் வினியோகம் செய்யும் முகவர்கள் பள்ளங்களில் தேங்கி நிற்கும் மழைநீரில் விழுந்து காயம் ஏற்பட நேரிடும். எனவே பால் முகவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் வகையில் விபத்து காப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட பொதுமேலாளர் கணேசா இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Next Story