மாநில கூட்டுறவு வங்கி ஊழல் அஜித்பவார் மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

மாநில கூட்டுறவு வங்கி ஊழல் அஜித்பவார் மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 23 Aug 2019 4:00 AM IST (Updated: 23 Aug 2019 2:30 AM IST)
t-max-icont-min-icon

மாநில கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித் பவார் மற்றும் 70-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மும்பை, 

குற்றச்சாட்டு

மராட்டிய மாநில கூட்டுறவு வங்கிக்கு 2007-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ரூ. 1000 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த முறைகேட்டில் முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித் பவார், விவசாய தொழிலாளர் கட்சி தலைவர் ஜெயந்த் பாட்டீல் மற்றும் 34 மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு கூட்டுறவு வங்கி அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதாக கூறப்பட்டது.

இருப்பினும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதை எதிர்த்து சமூக சேவகரான சுரிந்தர் ஆரோரா என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீசிடம் புகார் அளித்ததுடன், மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

உத்தரவு

இந்த வழக்கு நீதிபதிகள் தர்மாதிகாரி மற்றும் எஸ்.கே.ஷிண்டே ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் மற்றும் 70-க்கும் மேற்பட்டோர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்கள் இருப்பதை சுட்டிக்கட்டிய நீதிபதிகள் அவர்கள் மீது அடுத்த 5 நாட்களுக்குள் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

Next Story