மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணியில் மருத்துவ குழுவினர் தீவிரம்


மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணியில் மருத்துவ குழுவினர் தீவிரம்
x
தினத்தந்தி 22 Aug 2019 10:45 PM GMT (Updated: 22 Aug 2019 9:59 PM GMT)

பெண்ணாடம் அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியானாள். இதனால் மருத்துவ குழுவினர் அந்த பகுதியில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பெண்ணாடம்,

பெண்ணாடம் அருகே உள்ள பொன்னேரியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகள் பிருந்தா (வயது 10). மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிருந்தா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். இதன் காரணமாக தொளார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் செல்வரசி, சங்கீதா தலைமையிலான மருத்துவ குழுவினர் நேற்று பொன்னேரியில் முகாமிட்டு பொதுமக்களுக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா? என சோதனை செய்தனர்.

மேலும் மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதனை தொடர்ந்து இளநிலை பூச்சியியல் வல்லுநர் மூர்த்தி, மண்டல பூச்சியியல் இயக்குனர் ஆனந்தன் ஆகியோர் அப்பகுதி முழுவதும் கொசு மருந்து அடித்து, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினர். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், அய்யப்பன், ராஜ்மோகன், ரமேஷ், விஜயராகவன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.

Next Story