கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில், நேபாள நாட்டு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில், நேபாள நாட்டு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 23 Aug 2019 4:30 AM IST (Updated: 23 Aug 2019 3:29 AM IST)
t-max-icont-min-icon

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நேபாள நாட்டு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வடவள்ளி,

நேபாளநாட்டை சேர்ந்தவர் சந்தோஷ் நியூபன்(வயது26). இவர் கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் தங்கும் விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

நேற்று முன்தினம் இரவு விடுதி மாணவர்கள் வழக்கம்போல சாப்பிட்டுவிட்டு அவரவர் அறைக்கு தூங்கச்சென்றனர். சந்தோஷ் நியூபனும் அவர் தங்கி இருந்த அறைக்கு தூங்கச்சென்றார்.

நள்ளிரவு நீண்டநேரமாக அவரது அறையில் மின்விளக்கு எரிந்து கொண்டு இருந்ததை பார்த்த பக்கத்து அறையைசேர்ந்த மாணவர், சந்தோஷ் நியூபனின் அறைக்கு சென்று பார்த்தார். அப்போது அவர் ஜன்னலில் துண்டை கட்டி தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர், விடுதி வார்டன் கணேசனுக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட சந்தோஷ் நியூபனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்கொலை செய்து கொண்ட நோபாள நாட்டு மாணவர், அவரது ஊரை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவர் கோவைக்கு படிக்க வந்ததால், காதலியின் பெற்றோர் அமெரிக்காவில் வேலை பார்க்கும் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். காதல் தோல்வியால் மனவருத்தம் அடைந்த நிலையில் இருந்த சந்தோஷ் நியூபன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து நேபாளநாட்டில் உள்ள அவரது பெற்றோருக்கு ஆர்.எஸ்.புரம் போலீசார் தகவல் கொடுத்தனர். அவர்கள் கோவை வருகிறார்கள். 

Next Story