குன்னூர் பகுதியில் காலநிலை மாற்றம், பச்சை தேயிலை மகசூல் பாதிப்பு
குன்னூர் பகுதியில் காலநிலை மாற்றம் காரணமாக பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளது.
குன்னூர்,
நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் நீலகிரி மாவட்டம் முழுவதும் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. பொதுவாக தேயிலை செடிகளில் பச்சை தேயிலை மகசூல் பிடிக்க வெயிலும், மழையும் கொண்ட காலநிலை தேவை. சராசரியாக ஒரு நாளைக்கு 4 மணி நேரம் சூரிய ஒளி கிடைக்க வேண்டும். அப்போது தான் தேயிலை செடிகளில் கொழுந்துகள் நன்கு வளரும். கடந்த சில ஆண்டுகளாகவே குன்னூர் பகுதியில் போதிய மழையின்மை, கடும் வெயில் மற்றும் பனிப்பொழிவு கொண்ட காலநிலை வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் ஜனவரி முதலே மழை இன்றி கடும் பனிப்பொழிவு மற்றும் வெயில் கொண்ட காலநிலை இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குன்னூர் பகுதியில் தொடர் மழை மற்றும் மேகமூட்டம் கொண்ட காலநிலை இருந்து வருகிறது. இந்த காலநிலையால் தேயிலை செடிகளில் கொழுந்துகள் வளர்ச்சியடையாமல் உள்ளன. இதனால் பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சிறு தேயிலை விவசாயிகள் வருமானம் ஈட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நீலகிரி மாவட்ட நெலிகோலு சிறு, குறு சாகுபடியாளர் மற்றும் தேயிலை விவசாயிகள் சங்க தலைவர் சிவன் கூறியதாவது:-
குன்னூர் பகுதியில் மாறி வரும் காலநிலையால் பச்சை தேயிலை மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சிறு தேயிலை விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். வழக்கத்தை விட 40 சதவீதம் பச்சை தேயிலை மகசூல் குறைந்து உள்ளது.
மேலும் பச்சை தேயிலைக்கு கிடைக்கும் விலையும் குறைவாகவே உள்ளது. எனவே சிறு தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story