சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுகளை அனுமதிக்கக்கூடாது - வணிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம்


சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுகளை அனுமதிக்கக்கூடாது - வணிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 24 Aug 2019 4:15 AM IST (Updated: 24 Aug 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுகளை அனுமதிக்கக்கூடாது என்று வணிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட எலக்ட்ரிக்கல் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம் ஈரோடு பழையபாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தலைவர் டி.சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் சி.மாணிக்கம், செயலாளர் கே.சேகர் என்கிற முத்துசாமி, பொருளாளர் கே.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பட்டய கணக்காளர் சண்முகநாதன், தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணை பொதுச்செயலாளர் என்.சிவனேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ஜி.எஸ்.டி.யில் அனைத்து வரிகளும் 5 சதவீதம் மற்றும் 12 சதவீதமாக மாற்றி அமைக்க வேண்டும். தமிழ்நாடு வணிகர் நல வாரியம் சீரமைக்கப்பட்டு அனைத்து பதிவு பெற்ற வணிகர்களும் உறுப்பினராக வழி செய்ய வேண்டும்.

தேசிய வணிகர் நல வாரியம் அமைக்க முடிவு செய்த மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்வது. தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகள் செயல்பட முழுமையான பாதுகாப்பை போலீஸ் துறை உறுதி செய்திட வேண்டும்.

ரெயில்களில் வழங்கப்படும் உணவுகள் மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தவிர மற்ற பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தவிர்க்க வேண்டும். சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுகள் வருவதை அனுமதிக்கக்கூடாது.

முத்ரா திட்டத்தின் கீழ் வணிகர்களுக்கு வழங்கும் கடன் ரூ.10 லட்சம் வரை எந்தவித பிணையமும் இல்லாமல் வழங்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் உணவு பூங்கா அமைக்க வேண்டும். சாய, சலவை தொழில்களை காப்பாற்ற ஈரோடு மாவட்டத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story