திருப்புல்லாணி, ராமநாதபுரம் யூனியன்களில் கண்மாய், ஊருணிகளில் குடிமராமத்து பணிகள் - கலெக்டர் ஆய்வு


திருப்புல்லாணி, ராமநாதபுரம் யூனியன்களில் கண்மாய், ஊருணிகளில் குடிமராமத்து பணிகள் - கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 24 Aug 2019 3:45 AM IST (Updated: 23 Aug 2019 9:34 PM IST)
t-max-icont-min-icon

திருப்புல்லாணி, ராமநாதபுரம் ஆகிய யூனியன்களில் கண்மாய் மற்றும் ஊருணிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம்,

தமிழகத்தில் நிலத்தடி நீர் அளவினை மேம்படுத்தும் வகையிலும், மழைநீரை வீணாக்காமல் சேமிக்க ஏதுவாகவும் அனைத்து மாவட்டங்களிலும் குடிமராமத்து திட்டப்பணிகளின் கீழ் கண்மாய் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37 கோடியே 59 லட்சம் மதிப்பில் 69 பொதுப்பணித்துறை கண்மாய்களில் அந்தந்த விவசாய பாசனதாரர் நலச்சங்கங்களின் மூலம் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதவிர ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ஊராட்சி அளவில் உள்ள 224 சிறுபாசன கண்மாய்கள், 988 ஊருணிகளில் தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்க பணிகள் திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சிறு பாசன கண்மாய்க்கும் தலா ரூ.5 லட்சம் மதிப்பிலும், ஊருணிகள் தலா ரூ.1 லட்சம் மதிப்பிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு ரூ.21 கோடியே 8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து திருப்புல்லாணி யூனியனில் பொதுப்பணி துறையின்கீழ் கோவிலன்சாத்தான் கண்மாய் ரூ.32 லட்சத்திலும், வன்னிக்குடி கண்மாய் ரூ.50 லட்சத்திலும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி துறையின் கீழ் களரி ஊராட்சிக்கு உட்பட்ட கீழசீத்தை கிராமத்தில் உள்ள ஊருணி, புத்தேந்தல் ஊராட்சியில் உள்ள ஊருணி ஆகியவை தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்க பணிகள் திட்டத்தின் கீழ் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதனை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிவராமகிருஷ்ணன், தாசில்தார்கள் சிக்கந்தர் பபிதா, தமிழ்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமமூர்த்தி, பாண்டி, மங்களேசுவரி, ஊரக வளர்ச்சி முகமை உதவி பொறியாளர்கள் ஹேமா, ஜம்புலிங்கம், மற்றும் விவசாய பாசனதாரர் சங்க உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Next Story