தவறை மறைக்க புழுதிவாரி தூற்றுகிறார் தேவேகவுடா மீது சித்தராமையா கடும் தாக்கு கர்நாடக அரசியலில் பரபரப்பு


தவறை மறைக்க புழுதிவாரி தூற்றுகிறார் தேவேகவுடா மீது சித்தராமையா கடும் தாக்கு கர்நாடக அரசியலில் பரபரப்பு
x
தினத்தந்தி 24 Aug 2019 5:00 AM IST (Updated: 23 Aug 2019 10:46 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கூட்டணி அரசு கவிழ குமாரசாமியே காரணம் என்றும், தவறை மூடி மறைக்க தேவேகவுடா என் மீது புழுதிவாரி தூற்றுகிறார் என்றும் சித்தராமையா பகிரங்க குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி இருந்தது.

பனிப்போர் நீடிப்பு

கூட்டணியை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனால் எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா கடந்த மாதம் (ஜூலை) 26-ந்தேதி ஆட்சி அமைத்தது.

ஏற்கனவே கூட்டணி ஆட்சியின் போதும் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது. தற்போது கூட்டணி ஆட்சி கவிழ்ந்த நிலையில் இந்த பனிப்போர் நீடித்து வருகிறது.

சித்தராமையா பதில்

அதாவது முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் இருந்த காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு கவிழ சித்தராமையாவே காரணம் என்று குற்றம்சாட்டினார். மேலும், கூட்டணி அரசு நடந்த 14 மாதங்கள் குமாரசாமிக்கு காங்கிரஸ் தொல்லை கொடுத்தது என்றும், நாடாளுமன்ற தேர்தலில் நான் மற்றும் எனது பேரன் தோல்விக்கும் சித்தராமையா தான் காரணம் என்றும் தேவேகவுடா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.

தேவேகவுடாவின் இந்த குற்றச்சாட்டுக்கு முன்னாள் முதல்-மந்திரியும், கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவராக இருந்தவருமான சித்தராமையா பதிலளித்து பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் மேலிடம் முடிவு

நாட்டில் பிரதமர் மோடி தலைமையில் மதவாத கட்சியான பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. மத்தியில் பா.ஜனதா அரசு அமைந்தது முதல், வருமான வரித்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை அழிக்கும் பணியை பா.ஜனதா மேற்கொண்டு வருகிறது. இதனால் மதசார்பற்ற கட்சிகள் ஒன்று சேர்ந்து, பா.ஜனதாவை எதிர்த்து வருகின்றன. அந்த வகையில் கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் முழு மெஜாரிட்டி கிடைக்காதபோது, ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது.

இந்த முடிவு குறித்து என்னிடம் தலைவர்கள் தெரிவித்தபோது, நான் மறு பேச்சு பேசாமல் அதை ஒப்புக்கொண்டேன். இந்த நிலையில் ஒரு பத்திரிகைக்கு தேவேகவுடா அளித்த பேட்டியில், குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டணி அரசு கவிழ நான் காரணம் என்று கூறியிருக்கிறார். அது மட்டுமின்றி நாடாளுமன்ற தேர்தலில் துமகூரு, மண்டியா தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கும் நானே காரணம் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிலைமை வந்திருக்காது

குமாரசாமி முதல்-மந்திரி பதவியில் இருப்பதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டி, மறுநாள் பிற பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. இதற்கு பதிலளிக்க வேண்டாம் என்று நான் கருதினேன். ஆனால் செய்தி தொலைக்காட்சிக்கும் அவர் என்னை விமர்சித்து பேட்டி அளித்துள்ளார்.

இனியும் நான் அமைதியாக இருந்தால், மாநில மக்கள் என்னை தவறாக நினைப்பார்கள் என்று கருதி விளக்கம் அளிக்கிறேன். கர்நாடகத்தில் கூட்டணி அரசு கவிழ குமாரசாமியே காரணம். மந்திரியாக இருந்த எச்.டி.ரேவண்ணாவும் காரணமாவார். இதை நான் சொல்லவில்லை. எங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சொல்கிறார்கள். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களின் நம்பிக்கையை பெற்று ஆட்சியை நடத்தியிருந்தால் இன்று இந்த நிலைமை வந்திருக்காது. அரசுக்கு எதிராக யாருக்கும் அதிருப்தி ஏற்பட்டிருக்காது. மந்திரிகளின் கருத்துகளுக்கும் மதிப்பு அளிக்கவில்லை.

புழுதி வாரி தூற்றுகிறார்

தேவேகவுடா தனது தவறை மூடிமறைக்க என் மீது புழுதி வாரி தூற்றுகிறார். தேவேகவுடாவின் குற்றச்சாட்டில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. அரசியல் ஆதாயம் பெறவும், மக்களின் அனுதாபத்தை பெறவும் இது தேவேகவுடாவின் தந்திரம். என்னை விமர்சித்து அதன் மூலம் காங்கிரசின் பலத்தை குறைப்பது தான் தேவேகவுடாவின் நோக்கம்.

ஏனென்றால் மைசூரு மண்டலத்தில் காங்கிரஸ் பலமாக உள்ளது. கூட்டணி அரசில் நான் தலையிட்டதாக தேவேகவுடா கூறுகிறார். நான் கூட்டணி அரசின் செயல்பாடுகளில் தலையிடவில்லை. அவ்வாறு நான் தலையிட்டதற்கு ஏதேனும் ஒரு ஆதாரத்தை காட்ட முடியுமா?. 14 மாதங்கள் கூட்டணி அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினேன். ஆட்சியை காப்பாற்ற கடைசி வரை முயற்சி மேற்கொண்டேன்.

குற்றச்சாட்டு கற்பனையானது

கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவராக நான் இருந்தேன். இந்த குழுவின் 5, 6 கூட்டங்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை குமாரசாமி அமல்படுத்தவே இல்லை. ஆயினும் நாங்கள் அதுபற்றி பேசவில்லை. தொடர்ந்து அரசு சுமுகமாக செயல்பட ஒத்துழைப்பு வழங்கினோம். எடியூரப்பா முதல்-மந்திரியாக வேண்டும், நான் எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என்ற நோக்கத்தில் நான் கூட்டணி அரசை கவிழ்த்ததாக தேவேகவுடா சொல்கிறார்.

முதல்-மந்திரியாக வேண்டும் என்று நினைத்தவர்கள் பிற கட்சிகளின் ஆட்சியை கவிழ்த்ததை நான் பார்த்துள்ளேன். எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என்பதற்காக ஒரு ஆட்சியை கவிழ்த்ததை நான் எங்கும் பார்த்தது இல்லை. ஒருவேளை தேவே கவுடா இதை பார்த்துள்ளாரோ என்னவோ எனக்கு தெரியாது. தேவேகவுடாவின் குற்றச்சாட்டு கற்பனையானது, பொய்யானது.

தரம் தாழ்ந்த அரசியல்

நான் மந்திரியாக இருந்தபோது ஒரு முறையும், துணை முதல்-மந்திரியாக இருந்தபோது ஒரு முறையும் தேவேகவுடா என்னை நீக்கினார். அப்போதும் பதவி போனதை பற்றி நான் கவலைப்படவில்லை. கூட்டணி அரசில் காங்கிரசும் அங்கம் வகித்தது. இத்தகைய சூழ்நிலையில் கூட்டணி அரசை கவிழ்க்கும் தரம் தாழ்ந்த அரசியலை நான் செய்யவில்லை. தரம் தாழ்ந்த அரசியல் செய்வது என்பது தேவேகவுடா மற்றும் அவரது மகன்களின் பிறவி குணம்.

தரம்சிங் அரசு, எஸ்.ஆர்.பொம்மை அரசை கவிழ்த்தவர் தேவேகவுடா. கர்நாடகத்தில் இன்று பா.ஜனதா ஆட்சி நடக்கிறது என்றால் அதற்கு காரணம் தேவேகவுடா. 2004-ம் ஆண்டு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காதபோது, காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி வைத்தது. தரம்சிங் முதல்-மந்திரியானார். நான் துணை முதல்-மந்திரியாக பணியாற்றினேன். அப்போது தேவேகவுடா எனக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கவிடாமல் செய்தார். இதை சட்டசபையில் குமாரசாமியே ஒப்புக் கொண்டுள்ளார். இதுபற்றி நான் ஏதாவது பேசினேனா?.

கூட்டணி வைக்க வேண்டாம்

அப்போது இரவோடு இரவாக குமாரசாமி பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து முதல்-மந்திரியானார். இது தேவேகவுடாவின் அனுமதி இல்லாமல் நடைபெற வாய்ப்பே இல்லை. ஆனால் அப்போது தனக்கு ஒன்றுமே தெரியாதது போல் நாடகமாடினார். 20 மாதங்களுக்கு பிறகு எடியூரப்பாவுக்கு முதல்-மந்திரி பதவியை வழங்கியிருந்தால், பா.ஜனதா இந்த நிலைக்கு வளர்ந்திருக்காது. ஆனால் சொன்னபடி பா.ஜனதா ஆட்சிக்கு வாய்ப்பு வழங்காமல் தேவேகவுடா குடும்பத்தினர் பேச்சு தவறினர்.

இதனால் 2008-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா 110 இடங்களில் வெற்றி பெற்றது. இதற்கு தேவேகவுடாவே காரணம். நான் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்தவன். தேவேகவுடா என்னென்ன சதி திட்டங்களை தீட்டுவார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று நான் கூறியது உண்மை. ஒருவருக்கொருவர் சகோதரத்துவத்துடன் போட்டியிடலாம் என்றேன்.

ஒன்றாக பிரசாரம் செய்தோம்

ஆனால் கட்சி மேலிடம் கூட்டணி வைக்க முடிவு செய்ததால் நான் அதை ஏற்றுக்கொண்டேன். நானும் தேவேகவுடாவும் 6 தொகுதிகளில் ஒன்றாக பிரசாரம் செய்தோம். ஆனால் தேவேகவுடா, நிகில்கவுடா தோல்விக்கு நான் காரணம் என்று அவர் குற்றம்சாட்டி இருப்பது சரியல்ல. சிக்பள்ளாப்பூர், கோலார், பெங்களூரு வடக்கு, மைசூரு உள்ளிட்ட தொகுதிகளில் காங்கிரசின் தோல்விக்கு யார் காரணம்?.

மைசூருவில் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் காங்கிரசுக்கு வாக்களிக்கவில்லை என்று மந்திரியாக இருந்த ஜி.டி.தேவேகவுடா பகிரங்கமாக கூறினார். அவர் மீது தேவேகவுடா நடவடிக்கை எடுத்தாரா?. ஒரே குடும்பத்தை சேர்ந்த தாத்தா, பேரன்கள் தேர்தலில் போட்டியிட்டதால் மக்கள் அதை ஏற்கவில்லை.

குறை சொல்லக்கூடாது

நான் ஆட்சியில் இருந்தபோது எதையும் செய்யவில்லை என்று சொல்கிறார். ஏழைகளின் வயிற்றை நிரப்பும் அன்னபாக்கிய திட்டத்தை அமல்படுத்தினேன். இது மக்களுக்கு தெரியும். கட்சியில் தேவேகவுடா தனது குடும்பத்தினரை தவிர வேறு யாரையும் வளர்க்கவில்லை. அதனால் மற்றவர்களை குறை சொல்லக்கூடாது. தேவேகவுடாவை விமர்சித்தால், உடனே அவர் சாதியை அரசியலுக்குள் கொண்டுவந்து, எனக்கு எதிராக சாயம் பூசி விடுகிறார். ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணியை தொடருவது குறித்து காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுக்கும்.

தொலைபேசி ஒட்டுகேட்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று நான் கேட்கவில்லை. என்னிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, உண்மை வெளிவர விசாரணை நடைபெறட்டும் என்று கூறினேன். ஆனால் நான் சி.பி.ஐ. விசாரணை கேட்டதாக எடியூரப்பா பொய் சொல்கிறார். எடியூரப்பா டெல்லியில் இருந்து திரும்பியவுடன் சி.பி.ஐ. விசாரணையை அறிவிக்கிறார்.

யாரை திருப்திபடுத்த...

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கூறியதன் அடிப்படையில் எடியூரப்பா அந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பார் என்று நான் கருதுகிறேன். ஆனால் இந்த விஷயத்தில் மோடி, அமித்ஷா கூறவில்லை என்றும், அவர்களுக்கு வேறு பல முக்கிய வேலைகள் இருப்பதாகவும் தேவேகவுடா சொல்கிறார். யாரை திருப்திபடுத்த அவர் இவ்வாறு சொன்னார் என்று எனக்கு தெரியவில்லை.”

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story